வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (06/03/2018)

கடைசி தொடர்பு:11:00 (06/03/2018)

சிறந்த ராணுவம்; இந்திய ராணுவத்துக்கு உலகளவில் கிடத்த அங்கீகாரம்!

உலகின் சக்தி வாய்ந்த ராணுவ வல்லமை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்திய ராணுவம் நான்காம் இடம் பிடித்துள்ளது. 

இந்திய ராணுவம்

உலகில் உள்ள 133 நாடுகளின், ராணுவத்தின் வல்லமை அடிப்படையில் குளோபல் ஃபயர்பவர் -2017 என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ராணுவ வளங்கள், இயற்கை வளங்கள், தொழில் மற்றும் புவியியல் அம்சங்கள் மற்றும் மனிதசக்தி உள்ளிட்ட 50 முக்கிய அம்சங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில், அமெரிக்கா ராணுவம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ரஷ்யாவும் மூன்றாம் இடத்தில் சீனாவும் இடம்பிடித்துள்ளன.

இந்த நாடுகளைத் தொடர்ந்து இந்தியா நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், துருக்கி, ஜெர்மனி, எகிப்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. உலகளவில் பாகிஸ்தான் ராணுவம் 13-ம் இடத்தைப் பிடித்துள்ளது. 

இதனிடையே, வரும் ஆண்டுகளில், ரஷ்யாவைப் பின்னுக்கு தள்ளி, சீனா இரண்டாம் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. ரஷ்யாவை விட அதிகளவு போர் விமானங்களும், போர்க்கப்பல்களும், சீனாவிடம் உள்ளன. ராணுவத்திற்காக அதிக நிதி செலவுகளை செய்து, தொழில்நுட்பத்துடன் நவீனப்படுத்தும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து சீனா உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு சீனா  தனது ராணுவ நிதிநிலையில் மேலும் 8.1 சதவிகிதம் உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.