வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (06/03/2018)

கடைசி தொடர்பு:15:45 (30/06/2018)

``அண்ணா சிலையைக் காப்பாற்றுங்கள்!" - நாம் தமிழர் கட்சி கோரிக்கை

புதுக்கோட்டை நகரின் முக்கிய அடையாளமாக இருக்கக்கூடிய அண்ணாசிலையைக் காப்பாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை நகரின் மத்தியில் அமைந்திருக்கிறது அண்ணாசிலை. மார்க்கெட், வணிக நிறுவனங்கள் நிரம்பிய கீழவீதி, 4-ம் ராஜவீதி, தஞ்சாவூர் சாலை, ராமேஸ்வரம் சாலை ஆகிய முக்கிய சாலைகளின் சந்திப்பில் இருக்கும் இந்த முழு உருவ அண்ணாசிலை, தமிழகத்தில் இருக்கும் அண்ணா சிலைகளிலேயே மிக நேர்த்தியாக, எந்தப் பழுதும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

அண்ணா மறைந்ததும் அவருக்கு பெருமைசேர்க்கும் விதமாகப் புதுக்கோட்டை நகரில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, அதற்கான பெருமளவு நிதியைப் புதுக்கோட்டை நகர பொது மக்களே, தாமாக முன்வந்து கொடுத்தார்கள். ஒருவருடம் கழித்து அந்தச்சிலை தற்போது இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டது. இது நகரின் தவிர்க்க இயலாத இடமாகவும் அடையாளமாகவும் மாறிப்போனது. தற்போது, பிரச்னை சிலையில் இல்லை. அதைச் சுற்றி பாதுக்காப்புக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியில்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக அந்த வேலி பழுதுபார்க்கப்படாமல் இருக்கிறது. இதை முழுவதுமாகச் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சித் தலைவர் ரா.கணேசன், "நகரின் பிரதான இடத்தில் போக்குவரத்து நிரம்பிய இடத்தில் இந்தச் சிலை இருக்கிறது. இரவில் தூக்கக் கலக்கத்தில் லாரி ஓட்டி வருகிறவர்கள் மோதினால் சிலை முழுவதுமாகப் பாதிக்கப்படும். இன்னும் சொல்லப்போனால், பீடத்தோடு கீழே விழவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அண்ணாவைக் கொண்டாடும் கட்சிகள் அவர் திருஉருவச்சிலையைக் காப்பாற்றவும் முயற்சிகள் செய்ய வேண்டும். அதுபோல், பழுதடைந்த இரும்பு கிராதிகளால் இந்த இடத்தில் விபத்துகளும் நேரிடுகிறது. காவல்துறை அப்படியான கிராதிகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் வேண்டும். அண்ணாவுக்கு ஏதாவது விபத்து நேரிடுவதற்குள் அவரைக் காப்பாற்றுங்கள்" என்றார். அந்தப் பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரி ஒருவர், "அதை ஏன் கேக்கறீங்க. ஏதாவது அரசியல் நிகழ்ச்சிகள், தலைவர்கள் வருகை என்றால் எல்லோரும் பெரிய சைசில் இருபது முப்பது மாலைகளைக் கொண்டு வந்து, அண்ணாவோட கழுத்தே உடைகிற மாதிரி போட்டுட்டுப் போறாங்க. அந்தக் காசுலகூட இந்தச் சிலையைப் பாதுகாக்க முயற்சி பண்ணலாம். சிலைக்கு மாலை போட ஏறிப்போற படி ஓப்பனாத்தான் இருக்கு. ஏதாவது கனரக வாகனம் அதுல நேரா மோதினாலும் முடிஞ்சது கதை" என்றார்.