வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (06/03/2018)

கடைசி தொடர்பு:11:40 (06/03/2018)

`குருவி குருவிதான்; பருந்து பருந்துதான்’ ரஜினியைச் சீண்டும் ஜெயக்குமார்!

சென்னை, வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை நேற்று திறந்துவைத்து, தனது அரசியல் பயணம் குறித்து பல்வேறு விஷயங்களை மக்கள் முன்னிலையில் ரஜினி பேசினார். 

ஜெயக்குமார்

இந்நிகழ்ச்சியில், `தமிழில் பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். அதனால், இளைஞர்கள் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வது அவசியம். ஆங்கில மொழியைக் கற்றுக்கொண்டு, ஆங்கிலத்தில் பேசினால் மட்டும்தான் உலகளவில், தொழில் சிறப்புடன் முன்னேற முடியும்’ என்று மொழி பற்றின கருத்தை ரஜினி பதிவிட்டார். 

இதற்குத் தனது எதிர் கருத்தைத் தெரிவித்துள்ள அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார், ``தமிழில் பேசினால் தமிழ் வளராது என அரிய கண்டுபிடிப்பை அன்புச் சகோதரர் ரஜினி கண்டுபிடித்துள்ளார். இதன்மூலம் தமிழ் மொழிக்கு அவர் பெரிய பெருமை சேர்த்துள்ளார். இதைத் தமிழ் மக்களும் தமிழ் அறிஞர்களும் நன்கு புரிந்துகொள்வார்கள்.

எவ்வளவுதான் குருவி உயர உயர பறந்தாலும் குருவி குருவிதான். பருந்துபோல் குருவி பறக்க முடியாது. அ.தி.மு.க பருந்து. அதனால், ரஜினியைப் போன்ற ஊர்க்குருவிக்கெல்லாம் அ.தி.மு.க பயப்படாது. அவர் அரசியலுக்கு வருவதற்காகவே சிறந்த அரசியல் தலைவர்கள் இல்லை என்ற சாக்குப்போக்கை சொல்லிக்கொண்டிருக்கிறார்’’ என்றார்.