`என்னையும் கைது செய்துவிடுவார்கள் என அஞ்சுகிறேன்!’ - உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கறிஞர் வாதம் | Supreme Court refuses to give Karti chidambaram interiem relief

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (06/03/2018)

கடைசி தொடர்பு:12:33 (06/03/2018)

`என்னையும் கைது செய்துவிடுவார்கள் என அஞ்சுகிறேன்!’ - உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கறிஞர் வாதம்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்ய வேண்டும்  என்ற கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, மும்பையில் உள்ள ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு
வெளிநாட்டு நிதி பெறுவதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதில் 305 கோடி ரூபாய் முறைகேடு
நடந்துள்ளதாக அவர்மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகவில்லை. எனவே, அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் (தேடப்படும் நபர்) அனுப்பப்பட்டது. அதன் மூலம் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல முடியாமல் நேர்ந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்குத் தொடர்ந்து, அந்த வழக்கில் சில நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்லலாம் எனத் தீர்ப்பு அறிவிப்பட்டது.

தீர்ப்பின்படி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வெளிநாடு சென்றுவிட்டு, நாடு திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை, சென்னை விமான நிலையத்தில் வைத்து சி.பி.ஐ அதிகாரிகள் கைதுசெய்தனர். அதன் பின், அவர் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு நாள் சி.பி.ஐ காவலில் வைக்கப்பட்டார், தொடர்ந்து அவரின் காவல் 5 நாள்களாக நீட்டிக்கப்பட்டது. தற்போது அவர் மீதான காவல் முடிவடைய உள்ள நிலையில் கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய அனைத்து சம்மன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே அவரின் புதிய மனு.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். அவர் வாதிடுகையில், ``இந்த வழக்கில் எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவே விரும்புகிறோம். கார்த்திக்கு ஆதரவாக வாதாடுவதால், நானும் கைது செய்யப்படலாம் என்று அஞ்சுகிறேன்’’ என்று கூறினார். ஆனால், கார்த்தி சிதம்பரம் தரப்பு வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


[X] Close

[X] Close