பா.ஜ.க ஆட்சியில் அமர்வதற்கு முன்னரே திரிபுராவில் தொடர்ந்து வன்முறை!

திரிபுராவில் 25 ஆண்டு கால கம்யூனிஸ்ட்  ஆட்சி முடிவுக்கு வந்து . பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. அகர்தலாவில் இன்று புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்வதற்கு முன்னரே, பெலோனியா நகரத்தில் நிறுவப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் சிலை பொக்லைன் கொண்டு அகற்றப்பட்டது. அப்போது, 'பாரத் மாதா கீ ஜே' என பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

திரிபுராவில் வன்முறை

தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட கடந்த சனிக்கிழமையில் இருந்து திரிபுராவில் வன்முறை பெருகியுள்ளது. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.  பிசால்கர், அம்ரேந்த்ரா நகர், மோகன்பூர், கோவாய், கோம்லங், பெலோனியா நகரங்களில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

திரிபுராவில் வன்முறை

திரிபுராவில் பெருகிவரும் வன்முறைச் சம்பவங்களுக்கு பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே காரணமென்று  சிபிஎம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ''45 சதவிகித ஓட்டுகளை சிபிஎம் பெற்றதால் பொதுமக்களை, அலுவலர்களை, சி.பி.எம் கட்சித் தொண்டர்களை குறிவைத்து பாரதிய ஜனதா கட்சி வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது என்ற புகைப்படங்களுடன் சிபிஎம் ட்வீட் செய்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின்  குற்றச்சாட்டை பாரதிய ஜனதா கட்சி மறுத்துள்ளது. 'எங்கள் கட்சித் தொண்டர்கள் கண்ணியமாக அமைதியாக இருக்கிறார்கள். எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை ' என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. 

வன்முறை

திரிபுராவில் நிகழ்ந்துவரும் வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கவனித்து வருவதாகவும் மாநில நிலவரம் குறித்து ஆளுநர் ததாக்தா ராயிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.  


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!