வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (06/03/2018)

கடைசி தொடர்பு:11:47 (06/03/2018)

ஆர்யாவின் பெண் தேடும் படலம்...எதிராகக் களமிறங்குகிறதா பெண்கள் அமைப்பு?

 

ஆர்யா

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில்  ஒருவராக விளங்குபவர் ஆர்யா. சமீபத்தில் அவர் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், ஆர்யாவிற்கு எதிராகப் பெண்கள் அமைப்பு ஒன்று காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் ஆர்யாவுக்குத் திருமணம் ஆகவில்லை. சில மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த எண்ணுக்கு போன் செய்யலாம் என்று விளம்பரம் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாள்கள் கழித்து இந்த விளம்பரம் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்காக ஆர்யா கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கான விளம்பரம் என்று தெரியவந்தது. 

'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற பெயரில் அந்தத் தனியார் தொலைக்காட்சியில் ரியால்டி ஷோ நிகழ்ச்சிக்கான அறிவிப்பை அந்தத் தொலைக்காட்சி செய்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பல பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்குப் பல்வேறு டாஸ்க்குகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்குகள் அனைத்திலும் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்வார் என்று சொல்லப்பட்டது. இதனால் பல்வேறு இளம் பெண்கள் மத்தியிலும் ஆர்வம் ஏற்பட்டு, இந்த நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்திருந்தனர். மன்னர் காலங்களில் நடைபெறும் சுயம்வரம் போன்று, நவீன சுயம்வர நிகழ்ச்சியாக இதை அந்தத் தொலைக்காட்சி வடிவமைத்துள்ளது. 

ஆர்யா

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்களுடன் ராஜஸ்தான் சென்ற நடிகர் அங்கு அவர்களுடன் சைக்கிளில் பயணம் செய்வது போன்ற படங்களை வெளியிட்டு இருந்தார். அதாவது,சைக்கிளிங் பிரியரான ஆர்யாவிற்கு வரும் மனைவியும் சைக்கிளிங்கில் கில்லியாக இருக்க வேண்டும் என்ற டாஸ்க்கிற்காக இது வைக்கப்பட்டது. அதற்காக ராஜஸ்தானின் கடும் வெயிலில் பெண்களை சைக்கிள் ஓட்டவைத்தனர். 

ஒருபுறம் இளம் பெண்களிடம் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதே நேரம் சில பெண்கள் அமைப்பு, இந்த நிகழ்ச்சிக்கு எதிராகப் போர்க்கொடி துாக்கும் முடிவில் உள்ளனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக அந்த அமைப்பைச் சேர்ந்த பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல பெண்களை வைத்து ஷோ நடத்தி அதில் ஒருவரைத் தேர்வு செய்யும் ஆர்யாவின் மனோபாவம் பெண்களின் சுயமரியாதைக்கே இழுக்காக அமைவதாக அவர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

எனவே, சட்ட ரீதியாக இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள அந்தப் பெண்கள் அமைப்பினர் திட்டமிட்டுள்ளார்கள். வழக்கறிஞர் ஒருவர் ஆலோசனையின் அடிப்படையில் காவல்துறையில் ஆர்யா மீது புகார் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் ஆர்யாவிற்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கும் திட்டத்தில் அந்தப் பெண்கள் அமைப்பினர் தீவிர ஆலோசனையில்  உள்ளனர். ஆர்யா மீதான புகார் மனுவைத் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நிகழ்ச்சியைத் தனியார் தொலைக்காட்சி நடத்திவரும் வேளையில் பெண்கள் அமைப்போ, ஆர்யாவிற்கு எதிராகக் கச்சை கட்டி கிளம்புகின்றனர். காவல்துறையில் அளிக்கப்படும் புகாருக்குப் பிறகே இந்தப் பிரச்னையின் வீரியம் பற்றி தெரியப்போகிறது என்கிறார்கள் அந்தப் பெண்கள் அமைப்பினர். 

பெண் தேடப்போய் வம்பை விலைக்கு வாங்கிக் கொள்ளப்போகிறார் ஆர்யா என்று கமென்ட் அடிக்கிறார்கள். ரியாலிட்டி ஷோ நடத்துபவர்கள் இதனைக் கவனத்தில் கொள்வார்களா?. 


டிரெண்டிங் @ விகடன்