வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (06/03/2018)

கடைசி தொடர்பு:12:50 (06/03/2018)

ஆந்திரா, கர்நாடகா வியாபாரிகளால் தமிழக புளி விவசாயிகள் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் தர்மபுரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்கள் புளி விளைச்சலுக்குப் பெயர் பெற்றவை. ஒரு காலத்தில் சாலையோரங்களில் நிழலும், புளியும் கொடுத்துக்கொண்டிருந்த புளியமரங்கள் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அழிக்கப்பட்ட பிறகு, புளி விலை அதிகரித்து விட்டது. இந்நிலையில் இன்னமும் புளியைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கிறார்கள். நத்தம், சாணார்பட்டி, தவசிமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் புளி சாகுபடி அதிகளவில் நடக்கிறது. நத்தம் புளி பிரசித்திப்பெற்றது. ஆண்டுதோறும் புளி சந்தை மாசி மாதத்தில் திண்டுக்கல்லில் தொடங்கும். இந்தச் சந்தைக்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமல்லாமல், வெளிமாநில வியாபாரிகளும் வருவார்கள்.

விவசாயிகள்

இந்த ஆண்டுக்கான புளிச்சந்தை திண்டுக்கல் நாகல்நகரில் நேற்று தொடங்கியது. இந்த முறை புளி விளைச்சல் குறைவாக இருப்பதால் அதிக விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் புளியைச் சந்தைக்குக் கொண்டு வந்திருந்தனர். கொட்டை எடுத்த புளி கிலோ 200 ரூபாய்க்கும், கொட்டை எடுக்காத புளி கிலோ 125 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆந்திரா, கர்நாடகா பகுதியில் இருந்து ஐந்து லாரிகளில் புளி  வந்திறங்கியது. தலா 10 டன் வீதம் 50 டன் புளி சந்தைக்கு வந்தவுடன் விலை குறையத் தொடங்கியது. வரத்து அதிகமானவுடன் கொட்டை எடுத்த புளி கிலோ 200 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகக் குறையத்தொடங்கியது. கொட்டையுள்ள புளி கிலோ 60 ரூபாய் என குறைந்து விட்டது. இது, புளி விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த விலை இறக்கத்தைப் பயன்படுத்திக்கொண்ட வியாபாரிகள் குறைந்த விலைக்கு புளியைக் கொள்முதல் செய்தனர். திண்டுக்கல் புளிக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால், இந்தப் புளியை வாங்கி இருப்பு வைக்கும் வியாபாரிகள், வரத்து குறைந்தவுடன் அதிக விலைக்கு இதே புளியை விற்பார்கள். ஆக, இந்த ஆண்டு புளிச் சந்தை வியாபாரிகளுக்குக் கொண்டாட்டமாகவும், விவசாயிகளுக்குத் திண்டாட்டமாகவும் தொடங்கியுள்ளது. அரசு இந்த விஷயத்தில் தலையிட்டுப் புளி விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே புளி விவசாயிகளின் கோரிக்கை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க