வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (06/03/2018)

கடைசி தொடர்பு:18:22 (02/07/2018)

'தவறாகப் பரப்பாதீங்க'- புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்றை விளக்கும் அருங்காட்சியக அதிகாரி

"புதுக்கோட்டை சமஸ்தானம் குறித்த தவறான தகவல்களை தயவுசெய்து யாரும் பரப்ப வேண்டாம்"என்று புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தின் முன்னாள் காப்பாட்சியர் டாக்டர் ஜெ.ராஜா முகமது வேண்டுகோள் வைத்துள்ளார். 


அதிகாரி

கடந்த 3-ம்தேதி வாட்ஸ்அப்பில் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன்  இணைந்த தினம் குறித்த தவறான  பதிவுகளைச் சிலர் பரப்பி உள்ளனர். இந்தத் தகவல்களை முற்றிலுமாக மறுக்கிறார் ராஜா முகமது. இவர் கடந்த 2012-ம் வருடம் மத நல்லிணக்க விருதை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் கைகளால் பெற்றவர். புதுக்கோட்டை வரலாற்றை முழுவதுமாக அறிந்தவர். புதுக்கோட்டை வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவராகவும் இருந்தவர். இது குறித்து அவரிடம் கேட்டபோது, "புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய யூனியனுடன் இணைந்த தினம் 03.03.1948. இந்தியாவில் இருந்த 565 சமஸ்தானங்களுள் இதுவும் ஒன்று. சமஸ்தானங்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் நமது நாட்டு மன்னா்களால் தன்னாட்சி பெற்ற சமஸ்தான மன்னா்கள் ஆங்கிலேய ஆட்சியின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டவர்கள். பிறபகுதிகளில் நிலவிய பிரிட்டிஷ் அரசைவிட இங்கு சிறந்த நிர்வாகம். மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படாததால்  அதனை விரும்பினா். இந்தியாவின் சுதந்திரம் குறித்த பரிசீலனையில் சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து ஒரே  இந்தியாவாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டு, சமஸ்தான மன்னா்களுடன் பல சுற்று பேச்சு நடைபெற்றது. இறுதியாக 25 ஜூலை 1947-ல் நடைபெற்ற கூட்டத்தில் - ஹைதராபாத், பாட்டியலா, ஜுனாகத், காஷ்மீர் தவிர, ஏனைய மன்னா்கள் தங்கள் அதிகாரங்களை விடுத்து சுதந்திரம் அடையப்போகும் இந்தியாவுடன் இணைந்துகொள்ள சம்மதித்தனா். இதற்காக - Instrument of Accession - கையெழுத்தானது. புதுக்கோட்டையின் அப்போதைய தொண்டைமான் மன்னா்  ராஜா ராஜகோபால தொண்டைமானும் இந்த உடன்படிக்கையில் அன்று கையொப்பம் இட்டுள்ளாா்.

1947 ஆகஸ்டு 15-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபின் சமஸ்தானங்களை இணைக்கும் நிர்வாக வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் 03.03.1948-ல் இந்திய நிர்வாகத்துடன் இணைந்து திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய் கோட்டமானது. அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வி.வி.சுப்ரமணியம் ஐ.சி.எஸ். புதுக்கோட்டை வந்து ஆட்சி நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டாா். இவர் புதுக்கோட்டை மன்னா் கல்லூரியின் பழைய மாணவர். அப்போது கலிஃபுல்லா சாகிப் திவானாக இருந்தாா். இவரது கடுமையான சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக அரசு கருவூலத்தில் அன்று தேங்கியிருந்த 83 லட்ச ரூபாய் நிதியுடன்  இந்தியாவுடன் இணைந்தது. மன்னருக்கு மன்னா் மானியம் வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டன. மன்னருக்கென அவர்களது ஆலோசனையின்படி அவர்களுக்கான சொத்துகள் சமஸ்தானத்தில் இருந்து பிரித்துக்கொடுத்து உரிய ஆணைகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டையில் மன்னராட்சியே நிலவ வேண்டுமென மக்கள் சிலா் போராடத்தொடங்கினா். இதை எதிர்த்த மற்றொரு குழுவினா்,  புதுக்கோட்டை இந்தியாவுடன் இணைந்தே தீர வேண்டுமென போராடத்தொடங்கினா். இதற்கு புதுக்கோட்டை வழக்கறிஞர் முத்துச்சாமி வல்லத்தரசு தலைமை தாங்கினாா். ஆனால், சமஸ்தான இணைப்பு என்பது யாா் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏற்கெனவே 25.07.1947-ல் முடிவாகி விட்டது என்பது வரலாறு கூறும் உண்மை. சுமாா் 300 ஆண்டுகள் புதுக்கோட்டையில் நிலவிய தொண்டைமான் மன்னா்கள் ஆட்சி நிறைவு பெற்று மக்களாட்சி ஏற்பட்டது. நவீன புதுக்கோட்டையின் சிற்பிகள் தொண்டைமான் மன்னா்கள் எனலாம். புதுக்கோட்டை வரலாறு தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறது. 1974-ல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உருவானபோது தற்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகமாக இருக்கும் புதிய அரண்மனையை தமிழ்நாடு அரசு, மன்னா் ராஜகோபால தொண்டைமானிடம் இருந்து விலைகொடுத்து வாங்கிக்கொண்டது. இதுதான் உண்மை. இதைத் திரித்து தவறான தகவல்களையும் மிகைப்படுத்தப்பட்ட விசயங்களையும் யாரும் பரப்ப வேண்டாம்" என்றார்.