வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (06/03/2018)

கடைசி தொடர்பு:13:21 (06/03/2018)

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஒன்றுகூடிய அ.தி.மு.க, தி.மு.க எம்.பி-க்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க வேண்டும் என்று, அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் ஒன்றாக இணைந்து, நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதிமுக திமுக

கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. 

தீர்ப்பு வழங்கி 3 வாரங்கள் நிறைவடைந்த நிலையில், இன்னும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், அதிமுக, திமுக மற்றும் இடதுசாரி கட்சியை சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்ற  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மக்களவை இன்று நாள் முழுவதும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, இன்னும் 3 வாரக் காலங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மாநில அரசின் சார்பில் இடம்பெறும் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசின் சார்பில் இடம்பெறும் பிரதிநிதிகளை விரைவில் முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இந்த நிலையில் மத்திய நீர் வளத்துறை அமைச்சகம், நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய பிரதிநிதிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.