வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (06/03/2018)

கடைசி தொடர்பு:13:40 (06/03/2018)

அபாய போர்டு வைக்காததால் பறிபோன மாணவர்களின் உயிர்கள்!- அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு

குளத்தில் குளிக்கச் சென்றபோது சேற்றில் சிக்கி  மாணவர்கள் 2 பேர் இறந்த சம்பவத்திற்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள் கிராமப் பொதுமக்கள்.

மாணவர்கள் - மக்கள் கொந்தளிப்பு

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகில் அமைந்துள்ளது ஒகளூர் கிராமம்.அங்கு புது காலனியைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரின் மகன் சக்தி. இவர் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜன் மகன் சந்தோஷ், கலைச்செல்வன் மகன் சக்தி. இவர்கள் 2 பேரும் ஒகளூர் ஆதி திராவிட நலப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் பள்ளி முடித்துவிட்டு ஊரில் உள்ள பெரியகுளத்தில் குளிப்பதற்காகச் சென்றனர். அப்போது 3 பேரும் குளத்தின் ஆழம் தெரியாமல் குளத்தின் நடுப்பகுதிக்குச் சென்றனர். இதில் 3 பேரும் குளத்தில் உள்ள சேற்றில் சிக்கித் தத்தளித்தனர். இதையடுத்து அங்கு நின்ற பொதுமக்கள் 3 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் சக்தி, சந்தோஷ் இருவரும் குளத்தில் மூழ்கி இறந்தனர்.சக்தியை மட்டும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சக்தி, சந்தோஷ் ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் மூழ்கி, பள்ளி மாணவர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் பேசினோம். ''இரண்டு உயிர் போவதற்கு மாவட்ட நிர்வாகமே பெறுப்பேற்க வேண்டும்.இந்தக் குளம் அதிக ஆழம்கொண்டது.குளத்தை தூர்வாரியதால் சேறும், சகதியுமாக உள்ளது. பள்ளி விடுமுறை நாள்களில் மாணவர்கள்,குழந்தைகள் குளிக்க வருகிறார்கள் ஏதேனும் அசாம்பாவிதம் நடந்துவிடும் என்று இக்குளத்தைச் சுற்றிக் கம்பிவேலி போட வேண்டும். அபாயகர போர்டுகள் வைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் ஊர்மக்கள் சார்பில் மனு கொடுத்தோம் ஆனால், இன்று வரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.இவர்கள் அலட்சியத்தால் பரிதாபமாக இரண்டு உசுரு போயிடுச்சே.இன்னும் எத்தனை பேர்களைக் கொல்லப் போகிறார்களோ தெரியவில்லை. அதேபோல் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு இதேபோல் ஒரு சிறுவன் இறந்தான் அப்போது மக்கள் பிரச்னை செய்தார்கள் எந்த நடவடிக்கையும் இல்லை.இனிமேல் இந்தப் பிரச்னையை விட மாட்டோம். மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம்'' என்று எச்சரித்தனர்.