வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (06/03/2018)

கடைசி தொடர்பு:14:59 (06/03/2018)

சென்னை டு செங்கோட்டைக்கு ரூ.200 கட்டணம்! பயணிகளைக் குஷிப்படுத்திய 'அந்தியோதயா ரயில்'

அரசுப் பேருந்துக் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், சென்னை டு செங்கோட்டை இடையே வெறும் 200 ரூபாய் கட்டணத்தில் இயக்கப்படும் அந்தியோதயா ரயில் பயணத்துக்குப் பயணிகளிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. 

அந்தியோதயா ரயில்

தமிழக அரசு கடந்த மாதம் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், சாமான்ய மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். குடும்பத்துடன் தொலைதூரப் பயணம் செல்லும் சாதாரண மக்களுக்கு அரசுப் பேருந்துக் கட்டண உயர்வு கடும் சுமையாக மாறியுள்ளது. ரயிலில் பயணம் செய்வதே தங்களுக்கு லாபகரமானது என முடிவு செய்துள்ளனர். அதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த நிலையில், கோடைக்கால கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில், தென்னக ரயில்வே சார்பாகப் புதிய சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த ரயில்களிலும் முன்பதிவு முடிந்துவிட்டதால் பெரும்பாலான பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தச் சூழலில், செங்கோட்டை டு சென்னை தாம்பரம் இடையே அந்தியோதயா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. முழுக்க முன்பதிவற்ற பெட்டிகளைக் கொண்டு இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் சென்னை தாம்பரத்திலிருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் ரயில் இரவு 10.30 மணிக்கு செங்கோட்டையை வந்தடைகிறது. செங்கோட்டையிலிருந்து செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு சென்னை தாம்பரம் ஸ்டேஷனைச் சென்றடையும். சென்னை தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட ரயில் நேற்று (5.3.2018) இரவு செங்கோட்டை வந்தடைந்தது. அந்த ரயிலுக்குப் பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

குறைந்த கட்டண ரயில்

செங்கோட்டையிலிருந்து புறப்படும் அந்தியோதயா ரயில் தனது முதல் பயணத்தை இன்று ( 6.3.2018) காலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த ரயிலுக்கு செங்கோட்டை பயணிகள் நலச் சங்கத்தினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் ரூ.666 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளில் ரூ.800 முதல் ரூ.1,100 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்திரோதயா ரயிலில் ரூ.200 மட்டுமே கட்டணம் என்பதால் பயணிகள் உற்சாகமாகப் பயணிக்கின்றனர். 

செங்கோட்டையிலிருந்து செல்லும் இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாகச் சென்னை தாம்பரத்தைச் சென்றடைகிறது. அதனால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளும் இந்த முன்பதிவற்ற ரயிலைப் பயன்படுத்திக்கொள்ளும் வசதி கிடைத்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.