Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'20 லட்சத்துடன் வா... இல்லையென்றால் வராதே!' - எச்சரித்த கணவனை சிக்கலில் சிக்கவைத்த மனைவி

கணவருடன்  ஜீவிதா

வரதட்சணைக் கேட்டு கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர், கொடுமைப்படுத்தியதால் ஓடும் ரயிலிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கடற்கரையிலிருந்து கடந்த 3-ம் தேதி தாம்பரத்துக்குப் புறப்பட்ட மின்சார ரயில், கிண்டிக்கும் சைதாப்பேட்டைக்கும் இடையே சென்றபோது, பெண் பயணி ஒருவர் ரயிலிலிருந்து அடையாற்றில் குதித்தார். இதைப்பார்த்த பயணிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தனர். இதனால், ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இந்தத் தகவல் மாம்பலம் ரயில்வே போலீஸாருக்கும் தீயணைப்புத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அந்தப் பெண்ணை மீட்கப் போராடினர். ஆனால், அவர், ஆற்றுக்குள் மூழ்கினார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, அந்தப் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. மாம்பலம் ரயில்வே போலீஸார், அந்தப் பெண் குறித்து விசாரித்தனர்.

விசாரணையில், அடையாற்றில் குதித்த பெண், சென்னை பட்டாபிராம் அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்த ரோஸ் என்பவரின் மனைவி ஜீவிதா என்று தெரியவந்தது. ஜீவிதா, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றினார். ரோஸ், எம்.பி.ஏ படித்துவிட்டு ஐ.டி நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு பிரிவில் அதிகாரியாக உள்ளார். இந்தநிலையில், ரயிலில் இருந்து ஜீவிதா அடையாற்றில் குதிப்பதற்கு முன்பு அவரின் உறவினர்களிடம் போனில் பேசியுள்ளார் என்ற தகவலும் விசாரணையில் தெரியவந்தது.
 
 இந்தநிலையில், வரதட்சணைக் கொடுமையால் ஜீவிதா தற்கொலை செய்துகொண்டதாகச் சென்னை ஜார்ஜ் டவுனைச் சேர்ந்த அவரின் அம்மா கீதா, மாம்பலம் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "எனக்கு ஜீவிதா என்ற மகளும் கணேஷ் என்ற மகனும் உள்ளனர். என் மகள் ஜீவிதாவை ரோஸ் என்பவருக்கு கடந்த 11.2.2016-ல் திருமணம் செய்துவைத்தேன். திருமணம் செய்த நாளிலிருந்து என் மகள் கூட்டுக் குடும்பத்தில் வசித்துவந்தார். ரோஸ், அவர் தந்தை முரளி, அம்மா லட்சுமி, லட்சுமியின் தங்கை சுமதி, சுமதியின் கணவர் நாகேஷ் ஆகிய ஜந்துபேரும் எனது மகளை நிம்மதியாக வாழ விடாமல் வரதட்சணைக் கேட்டு தினமும் அடித்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திவந்தனர். என் மகளும் என்னிடம் வந்து தகவலைச் சொல்லும்போது என்னால் முடிந்த அளவு பணம் மற்றும் நகைகளைக் கொடுத்துவந்தேன். மேலும், என் மகளின் சம்பளத்தையும் ஏ.டி.எம் கார்டு மூலம் முரளி, மாதந்தோறும் எடுத்துக்கொள்வார். என் மகளுக்கு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தைக்காக அனைத்து சித்ரவதைகளையும் ஜீவிதா பொறுத்துக்கொண்டார்.

ஜீவிதா

இதையடுத்து ரோஸுக்கும் அவருடன் பணிபுரியும் பெண் ஊழியருக்கும் நட்பு இருந்தது. இதை என்னுடைய மகள் தட்டிக்கேட்டதற்கு அவரை அடித்து உதைத்துள்ளனர். இதைப்பற்றி என்னிடம் ஜீவிதா போனில் தகவல் தெரிவித்தார். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஜீவிதாவைச் சமாதானம் செய்தோம். இந்நிலையில் ஜீவிதாவுக்கும் ரோஸுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, 'இனி நீ என் வீட்டுக்கு உயிருடன் வராதே, வந்தால் 20 லட்சம் ரூபாய் பணத்துடன் வா, அதுவும் முடியவில்லை என்றால் செத்துப்போ' என்று ரோஸ் கூறியுள்ளார். மேலும் விவாகரத்து தொடர்பாகச் சில பத்திரங்களிலும் கையெழுத்துப்போடும்படி மிரட்டியுள்ளார்.

இதனால் ஜீவிதா, மனஉளைச்சலாகி இந்த முடிவை எடுத்துள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்புகூட போனில் தகவலை கணேஷிடம் கூறி கதறியழுதுள்ளார். அப்போதுகூட 'அவளுக்கு ஆறுதல் கூறினோம். வீட்டுக்குப் போ பிரச்னையைப் பேசி முடித்துக்கொள்ளலாம்' என்று கூறினோம். அதன்பிறகு, ஜீவிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. இதனால் அவளை தொடர்பு கொள்ளமுடியவில்லை. எனவே, என்னுடைய மகளைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

ஜீவிதாவின் உறவினர்கள் சிலர் கூறுகையில், "ஜீவிதாவின் மகளின் முதலாமாண்டு பிறந்தநாள், கடந்த 5-ம் தேதி. அதைச் சிறப்பாகக் கொண்டாட விரும்பியதோடு தன்னுடைய பெற்றோரையும் அழைக்குமாறு ஜீவிதா கணவர் வீட்டினரிடம் தெரிவித்துள்ளார். அதில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வரதட்சணைக் கொடுமையால் மனஉளைச்சலில் இருந்த ஜீவிதாவுக்கு தொடர்ந்து நடந்த கொடுமையான சம்பவங்களால் அவர் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளார்" என்றனர். 

 ஜீவதாவுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே போலீஸாரிடமிருந்த இந்த வழக்கு சட்டம் ஒழுங்கு காவல் பிரிவுக்கு மாற்றப்படவுள்ளதாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஜீவிதாவின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜீவிதாவின் கணவர் வீட்டினரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement