வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (06/03/2018)

கடைசி தொடர்பு:13:18 (06/03/2018)

ஆஸியின் ஸ்லெட்ஜிங், மார்க்ரம் - டி காக் பார்ட்னர்ஷிப்... டர்பன் டெஸ்ட் சுவாரஸ்யங்கள்! #SAvsAUS

இது டி-20 யுகம். ஒரு நிமிட வீடியோவையே ஃபார்வர்ட் செய்து பார்க்கும் காலம். அப்படியிருக்க, ஒரு விளையாட்டின் முடிவுக்காக ஐந்து நாள்கள் காத்திருக்கப் பொறுமையில்லை. டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கிச் செல்வதாகக் கவலைப்படுகின்றனர் கிரிக்கெட் நிபுணர்கள். அதற்கு அவசியம் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டர்பன் டெஸ்ட் அதற்குச் சான்று. ஸ்லெட்ஜிங் மட்டுமல்ல காரணம். நிஜமாகவே டர்பன் டெஸ்ட் போட்டியில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஆக்ரோஷம் இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமெனில், இதுபோன்ற `Arch rivalry’ போட்டிகள் ஏராளம் வேண்டும். #SAvsAUS

SAvsAUS

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரும் `Arch rivalry’ கேட்டகிரிதான். ஆனாலும், 2017-18 ஆஷஸ் தொடரில் அவ்வளவு சுவாரஸ்யமில்லை. ஒன்சைட் கேம்போல இருந்தது. இந்த சீசனில் ஆஸ்திரேலியாவுக்கு முன் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தது இந்திய அணி. இந்தியா, லிமிடெட் ஓவர் தொடர்களை வென்றாலும், 1-2 என டெஸ்ட் தொடரை இழந்திருந்தது. இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடர் முடிவதற்கு முன்னதாகவே, தென்னாப்பிரிக்காவின் பெருந்தலைகள் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்குத் தயாராகி விட்டன. ஏனெனில், அவர்களுக்கு இந்தியாவை வென்றது விஷயமில்லை. ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். அதுவும் தங்கள் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும்.  ஏனெனில், இனவெறி பிரச்னையில் இருந்து மீண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பிய நாள் முதல், தங்கள் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வென்றதில்லை. எந்த மண்ணிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதென்பது அவ்வளவு எளிதும் இல்லை.

Maharaj, Rabada

டர்பன் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கு 417 ரன்கள். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது இன்னிங்ஸில் 350 ரன்களை சேஸ் செய்வதற்கே தாவு தீரும். டர்பன் பிட்ச் சுழலுக்குச் சாதகம். பார்ட் டைம் பெளலர் ஸ்டீவ் ஸ்மித்கூட அபாரமாக டர்ன் செய்தார். முதல் இன்னிங்ஸில் எல்கர், ஆம்லா, டி காக் என மூன்று பெரும்புள்ளிகளை வீழ்த்தியிருந்தார் நாதன் லயான். இது விஷயமல்ல. சுழலுக்கு ஒத்துழைக்கும் இந்த பிட்ச்சில் மிச்செல் ஸ்டார்க் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார். ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ் எப்போதும் மிரட்டக் காத்திருக்கின்றனர். இந்த பெளலிங் யூனிட்டை வைத்து எந்த அணிக்கும் தண்ணி காட்டலாம் என்பது ஸ்டீவ் ஸ்மித்தின் நம்பிக்கை. அவர் நினைத்ததுபோலவே தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 49/4 என்ற தர்மசங்கடமான சூழலில் இருந்தது. 400+ ரன்களை சேஸ் செய்யும்போது நல்ல ஓப்பனிங் அமைய வேண்டியது அவசியம்; இரண்டுமுறை 150+ பார்ட்னர்ஷிப் அமைய வேண்டியது அவசியம்; சீனியர் வீரர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டியது அவசியம். இதில் எந்த பாக்ஸையும் தென்னாப்பிரிக்கா டிக் செய்யவில்லை.

A B de Villiers

ஸ்டார்க் பந்தில் டீன் எல்கர் 9 ரன்களில் காட் பிகைண்ட்; ஹேசில்வுட் பந்தில் ஆம்லா 8 ரன்களில் எல்பிடபுள்யு; ரன் கணக்கைத் தொடங்காமலேயே டி வில்லியர்ஸ் ரன் அவுட்.  தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் காலி. மார்க்ரம் ஸ்கொயர் லெக் பக்கம் சிங்கிள் தட்டி விடுகிறார். அங்கு டேவிட் வார்னர் காத்திருக்கிறார். ரன் எடுக்க வாய்ப்பே இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. ஆனால், Non striker end-ல் இருந்த டி வில்லியர்ஸ் அவசரப்பட்டுவிட்டார். ரன் எடுக்கப் புறப்பட்டுவிட்டார். மார்க்ரம் வேண்டாம் என்ற சொன்னது டி வில்லியர்ஸின் காதுகளில் தாமதமாகவே விழுந்தது. பாதி பிட்ச்சுக்குப் போய், மீண்டும் இருப்பிடத்துக்குத் திரும்பும் முன், டேவிட் வார்னர் நேர்த்தியாக த்ரோ செய்துவிட்டார். அதை நாதன் லயான் தாமதிக்காமல் ரன் அவுட் செய்துவிட்டார். டி வில்லியர்ஸ் அவுட். முதல் இன்னிங்ஸில் 71 ரன்களில் நாட் அவுட். இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட். டி வில்லியர்ஸ் இல்லை, பங்காளி ஆம்லா இல்லை. டு பிளெஸ்ஸியும் ஏமாற்றிவிட்டார். தென்னாப்பிரிக்காவின் கதை அப்போதே முடிந்ததுபோல இருந்தது. ஆனால், அதற்குப்பின்தான் ட்விஸ்ட்டே...!

இக்கட்டான தருணங்கள்தான் ஒரு மனிதனுக்குள் இருக்கும் உச்சபட்ச திறமையை வெளிக்கொண்டுவர காரணமாக இருக்கின்றன.  நான்காம் நாள் ஆட்டத்தில் மார்க்ரம், தன்னுள் இருக்கும் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனை அவிழ்த்துவிட்டார்.  தன் வாழ்நாளின் சிறந்ததொரு இன்னிங்ஸைக் கட்டமைத்தார். சதமும் அடித்தார். இது ஒன்றும் முதல் சதம் அல்ல. மூன்றாவது சதம். ஆனாலும், இந்த சதம் சம்திங் ஸ்பெஷல். ஏனெனில், ஜிம்பாப்வே, வங்கதேசத்துக்கு எதிரான அவரது முந்தைய சதங்களை விட இந்த சதம் பெரிது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, அதுவும் நான்காவது இன்னிங்ஸில், மிச்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் என மும்மூர்த்திகளின் வேகத்தில் தப்பிப்பிழைத்து, நாதன் லயான் சுழலில் சிக்காமல் அடித்த இந்த சதத்தை கிரிக்கெட் உலகம் என்றும் நினைவுகூரும்.

Mitchel Starc

`ஒரு நல்ல நாவலில் எதையெல்லாம் எழுத வேண்டும் என்பதைவிட, எதையெல்லாம் எழுதக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்’ என்பது இலக்கியவாதிகளின் கருத்து. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தேர்ந்த பேட்ஸ்மேன் கற்றுக்கொள்ள வேண்டிய தியரியும் இதுவே. எந்தப் பந்தையெல்லாம் தொட வேண்டும் என்பதைவிட, எந்தப் பந்தையெல்லாம் தொடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மார்க்ரம் அதில் மாஸ்டர் டிகிரி வாங்கியவர் போல தெரிந்தார். தொட்டால் சிக்கிவிடுவோம் என்று மிரட்டிய பந்தைத் தொடவில்லை.  அதேநேரத்தில், குட் லென்த்தில் விழுந்த பந்துகளை  அட்டகாசமாக கவர் டிரைவ் அடிக்கவும் தவறவில்லை; டவுன் தி லைன் வந்து நாதன் லயான் பந்தை ஸ்ட்ரெய்ட்டில் சிக்ஸர் அடிக்கவும் தவறவில்லை. குறுகிய காலத்திலேயே தேர்ந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் எனப் பெயரெடுத்து விட்டார்.

A B de Villiers run out

வெறுமனே ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் பந்தைச் சமாளித்து சதம் அடித்தார் என்பதோடு மார்க்ரம் ஆட்டத்தைக் கடந்துவிட முடியாது. ஏனெனில், ஆஸ்திரேலியர்களின் பந்துவீச்சை விட அவரது வாய்ச் சவடால்களை எதிர்கொள்வது சிரமம். ஸ்லெட்ஜிங் அவர்கள் கூடவே பிறந்தது. பரம்பரைச் சொத்தைப்போல அதை அவர்கள் அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றி வருகிறார்கள். டி வில்லியர்ஸை அவுட்டாக்கியதும் டேவிட் வார்னர் ஏகத்துக்கும் கர்ஜித்தார். ரன் அவுட் செய்த பின் டி வில்லியர்ஸ் அருகில் பந்தைப் போட்டு அடாவடி செய்தார் நாதன் லயான்; மார்க்ரம் கேட்ச்சைப் பிடித்த பின் பெய்ன் கால்கள் தரையில் நிற்கவில்லை; விக்கெட் விழாத ஒவ்வொரு பந்துக்கும் மிச்செல் ஸ்டார்க் பொறிந்து தள்ளிக்கொண்டிருந்தார். ஹெல்மெட்டில் விழுந்து தெறித்த பந்தைப் பிடித்து ரிவ்யூ கேட்டார் ஸ்டீவ் ஸ்மித். டிரெஸ்ஸிங் ரூம் செல்லும் வழியிலும் டி காக்கிடம் வம்பிழுத்தார் டேவிட் வார்னர். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு (மார்க்ரம் - டி ப்ருய்னே, மார்க்ரம் - டி காக் ஜோடிகளுக்கு) ஆஸ்திரேலிய வீரர்கள் நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தனர். குறிப்பாக, களத்தில் நீண்ட நேரம் நின்ற மார்க்ரமை அவர்கள் குறிவைத்து ஸ்லெட்ஜிங் செய்தனர். இந்த ஸ்லெட்ஜிங் குறித்து ஐ.சி.சி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.  

 ``டி வில்லியர்ஸை ரன் அவுட் செய்துவிட்டாதாக மார்க்ரமிடம் சொன்னோம். இது ஆக்ரோஷம் இல்லை. அவர் என்ன செய்தார் என்பதை அவரிடம் நினைவுபடுத்தி, ஆட்டத்தில் இருந்து அவரை திசை திருப்ப முயன்றோம்.  ஆனால், அது பலிக்கவில்லை’’ என ஸ்லெட்ஜிங் செய்ததை ஒப்புக்கொண்டார் டிம் பெய்ன்.  இந்த ஸ்லெட்ஜிங்கை ஜஸ்ட் லைக் தட் என டீல் செய்தார் மார்க்ரம். ``ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இதெல்லாம் இயல்புதான். அவர்கள் எப்போதும் பேட்ஸ்மேன்களுடன் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். டி வில்லியர்ஸ் ரன் அவுட்டானது என்னைப் பாதித்தது. ஆனால், என்னைச் சுற்றி எழுந்த அந்தப் பேச்சுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இந்தத் தொடர் முழுவதும் இது தொடரும் என நினைக்கிறேன்’’ என்றார் மார்க்ரம்.

Aiden Markram

முதல் இன்னிங்ஸில் மிச்செல் மார்ஷ் அடித்த 96 ரன்கள், தென்னாப்பிரிக்கா சார்பில் மகாராஜ், ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் எடுத்த 5 விக்கெட்டுகள், டி வில்லியர்ஸின் தனி ஒருவன் போராட்டம் எல்லாவற்றையும் விட, இரண்டாவது இன்னிங்ஸில் 5-வது விக்கெட்டுக்கு மார்க்ரம் - டி ப்ருய்னே ஜோடி சேர்த்த 87 ரன்களும், அதைவிட 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்க்ரம் - டி காக் வெளிப்படுத்திய ஆட்டமும்தான் டர்பன் டெஸ்ட்டின் பேசுபொருள். மார்க்ரம் ஒருபுறம் நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார் எனில், டி ப்ருய்னே அடித்த ஒவ்வொரு பவுண்டரியும் பக்கா. ஸ்டார்க் 149 கி.மீ வேகத்தில் வீசிய பந்தை அநாயசமாக ஸ்ட்ரெய்ட் டிரைவ் செய்தவிதமும், அதே ஓவரில் 140 கி.மீ வேகத்தில் அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில் வந்ததை கவர் திசையில் பவுண்டரிக்கு விரட்டியதும், தேர்ந்த பேட்ஸ்மேன் என சொல்லவைத்தது. 

மார்க்ரம் 143 ரன்கள் அடித்தது பாராட்டுக்குரியது. ஆனாலும், எதிர்முனையில் அவருக்கு முழு மூச்சாக ஒத்துழைத்தார் டி காக். டிரைவ் செய்வது அவருக்கு அசால்ட் என்றாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பெரும்பாலும் கல்லி - ஸ்லிப் இடைவெளியில் தட்டி விடுவதிலும், கட் ஷாட் ஆடுவதிலுமே கவனம் செலுத்தினார். முடிந்தவரை மார்க்ரமுக்கு ஸ்ட்ரைக் தந்தார். மார்க்ரம் - டி காக் ஜோடி பேட்டிங் செய்யும்போது, தென்னாப்பிரிக்கா 417 ரன்களை எளிதில் சேஸ் செய்யும் என்ற சூழல் இருந்தது. ட்விட்டர் பிஸியானது. ஞாயிறு மாலை ரம்மியமாக மாறியது. நாதன் லயான் பந்தில் மார்க்ரம் அடுத்தடுத்து பவுண்டரி அடித்ததைப் பார்த்து டி வில்லியர்ஸ் நிம்மதியாக டிரிங்ஸ் குடித்தார். தென்னாப்பிரிக்க ரசிகர் ஒருவர் மேல்சட்டை இல்லாமல் ஒரு கையில் பீர் டம்ளரும், மறு கையில் பவுண்டரிக்கான சைகையுமாகக் கொண்டாட்டமாக இருந்தார். 

Hazlewood

ஸ்டீவ் ஸ்மித் பெளலர்களை மாற்றினார்; பெளலர்கள் பந்துவீசும் எண்டை மாற்றினார்; ஃபீல்டிங்கை மாற்றினார். ம்ஹும்... மார்க்ரம் - டி காக் ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. விக்கெட் கீப்பரை ஸ்டம்புக்கு அருகில் நிற்கச் சொன்னார். மிச்செல் மார்ஷை அதே லைனில் பந்து வீசச் சொன்னார். ஒரு வழியாக ஸ்மித்தின் முயற்சி பலித்தது. மிச்செல் மார்ஷ் பந்தில் மார்க்ரம் அவுட். அடுத்து வந்த டெயிலெண்டர்கள் பிலாந்தர், மகாராஜ், ரபாடா மூவரையும் ஒரே ஓவரில் அனுப்பினார் ஸ்டார்க். அதிலும் மகாராஜ், ரபாடாவை அவுட்டாக்கியதெல்லாம் வேற லெவல். டி காக் - மோர்கல் ஜோடியால் ஐந்தாவது நாளை நோக்கி மட்டுமே நகரமுடிந்தது. வெற்றிக்கு அருகில் செல்ல முடியவில்லை. எதிர்பார்த்தது போலவே ஆஸ்திரேலியா வெற்றி. இருந்தாலும், மார்க்ரம் - டி காக் ஜோடி களத்தில் இருந்தவரை ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் கையில் இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் சுவாரஸ்யமாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் உயிர்த்தெழுந்து கொண்டிருந்தது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்