`அ.தி.மு.க-வை அழித்துக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி' - புதுச்சேரியில் கொதித்த புகழேந்தி

”அ.தி.மு.க-வில் பஞ்சாயத்து செய்வதும், அதன்மூலம் அ.தி.மு.க-வை அழிப்பதற்கான வேலைகளில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்” என்று டி.டி.வி தினகரன் ஆதரவாளர்  புகழேந்தி தெரிவித்துள்ளார்.

புகழேந்தி

மயிலாடுதுறையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டி.டி.வி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி இன்று புதுச்சேரியில் விமானம் மூலம் பெங்களூரு செல்கிறார். அப்போது புதுச்சேரி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடியைத் திருப்திப்படுத்துவதற்காகத் தமிழக அமைச்சர்கள் அனைவரும் தினமும் ஒரு மணி இந்தி மொழியைக் கற்றுக்கொண்டு வருகிறார்கள். பிரதமர் மோடிக்கு நாட்டில் வேறு எந்த வேலையும் கிடையாது. தமிழக அ.தி.மு.க-வில் பஞ்சாயத்து செய்வதும், அதன்மூலம் அ.தி.மு.க-வை அழிக்கும் வேலையிலும் மட்டுமே அவர் ஈடுபட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு காவிரி நீருக்காகப் போடக்கூடிய தலைவர்கள் தமிழகத்தில் யாருமே இல்லை. தமிழகத்தில் எத்தனை அனைத்துக்கட்சிக் கூட்டம் போட்டாலும் பிரதமர் மோடி காவிரிக்கு சாதகமாக எந்த முடிவையும் எடுக்க மாட்டார். அதேபோல இந்த விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த யாரையும் பிரதமர் மோடி சந்திக்கவும் மாட்டார். எனவே, முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது ஒரு நாடகம். இது எந்தவிதத்திலும் தமிழக மக்களுக்குப் பயன் தராது. டி.டி.வி.தினகரன் புதிய கட்சி ஆரம்பிப்பதில்  எனக்கு விருப்பம் இல்லை. புதுக்கட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதோடு அது தேவையும் இல்லை என்பதே எனது கருத்து” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!