நகைக்கடையைத் திறக்க வந்த ஓனருக்கு கொள்ளையன் கொடுத்த அதிர்ச்சி

கொள்ளை

சென்னை அண்ணாநகரில் உள்ள நகைக்கடையில் 10 கிலோ நகை கொள்ளைபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அண்ணாநகர், 2 வது அவென்யூவில் பிரபல ஜூவல்லரி கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையைத் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர்,  கடந்த 10 ஆண்டுகளாக நடத்திவருகிறார். இன்று காலை அவர், வழக்கம்போல் கடையைத் திறந்தார். . நேற்றிரவு கடையை மூடிவிட்டுப் பத்திரமாக லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ நகைகள் கொள்ளை போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, திருமங்கலம் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர். 

கொள்ளை குறித்து போலீஸார் கூறுகையில், "ஜூவல்லரி கடையின் மூன்றாவது மாடி இரும்புக்கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். கீழ்தளத்தில் நகைகளும் முதல்தளத்தில் வெள்ளிப் பொருள்களும் இருந்தன. மேலும் முதல்தளத்தில்தான் லாக்கரும் இருந்துள்ளன. நேற்று கடையை மூடிய ஐயப்பன், விலை உயர்ந்த நகைகளை மட்டும் லாக்கரில் வைத்துப் பூட்டியுள்ளார். ஆனால், லாக்கரின் சாவியை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளார். இதனால், கொள்ளையர்கள் சாவி மூலம் லாக்கரைத் திறந்து கொள்ளையடித்துள்ளனர். அதன்பிறகு முதல் தளத்துக்கு வந்த கொள்ளையர்கள் அங்கிருந்த வெள்ளிப் பொருள்களையும் கொள்ளையடித்தனர். அப்போது எடை குறைவான நகைகளை மட்டும் கொள்ளையர்கள் எடுத்துச் செல்லவில்லை. 5 கிலோ வெள்ளிப் பொருள்களைக் கொள்ளையடித்ததோடு 5 லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு, மாடி வழியாகவே தப்பிச் சென்றுள்ளனர். கைரேகை மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையர்களைத் தேடிவருகிறோம். இந்தக் கொள்ளை சம்பவத்தில் சிலர் மீது எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கொள்ளையர்களைத் தேடிவருகிறோம். கொள்ளைபோன நகைகளின் முழுவிவரம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்’’ என்றனர்.

 சென்னையில் கடந்த சில தினங்களாக வழிப்பறி, கொள்ளை எனத் தொடர் சம்பவங்கள் நடந்துவருகின்றன. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரில் சென்ற ஜந்து பேரிடம் அதிகாரிபோல நடித்து துப்பாக்கி முனையில் 12 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அடுத்து, பூக்கடை பகுதியில் நடந்து சென்றவரிடம் 3 லட்சம் ரூபாய் வழிப்பறி நடந்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு நடந்துவரும் இந்த நேரத்தில், இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. . 

 அண்ணாநகரில் நடந்த கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!