வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (06/03/2018)

கடைசி தொடர்பு:13:32 (16/03/2018)

ஊழலை மறைக்க தாசில்தார் நடத்திய `சடுகுடு’ ஆட்டம்! அதிர்ந்துபோன கிருஷ்ணகிரி கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டக் கலெக்டர் கதிரவன், ஒரு ஃபைலை எடுத்து படித்தபோது `இப்படியும் ஓர் ஊழலைச் செய்ய முடியுமா’ என்ற ஆச்சர்யத்துடன் படிக்கத் தொடங்கியவருக்கு செய்ய முடியும் என்று ஓர் அதிகாரி நடத்திக் காட்டியுள்ளார். கிருஷ்ணகிரியில் தற்போது இந்த ஊழல் முறைகேட்டைப் பற்றித்தான் பரபரப்பான விவாதம் நடத்துகொண்டுள்ளது. 

கிருஷ்ணகிரி கலெக்டர்

அப்படி என்னதான் ஊழல் நடந்துவிட்டது என்று விசாரித்தபோது, ஊழல் கதை கொஞ்சம் சுவாரஸ்யமாகவே நகர்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நில எடுப்பு தாசில்தாராகப் பணியாற்றியவர் எம்.பி.நாகராஜ். இவர், தேசிய நெடுஞ்சாலைக்குத் தேவையான நிலத்தை உரிய இழப்பீடு வழங்கி தனியார் நிலங்களை அரசுக்குக் கையகப்படுத்தித் தருவதுதான் இவரின் பணி. இவர் பணியாற்றிய காலத்தில், ஓசூரில் 4 வழி தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக மாற்றி அமைக்க ஓசூர் மூக்காண்டபள்ளியில் அமைந்துள்ள அசோக் லைலாண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்தை சர்வே எண் 21/4, 21/5 24/4-ல் 8,131 சதுர அடி நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்காக இழப்பீடு தொகை ரூ.90 லட்சம் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது.

நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் சில குளறுபடிகள் இருந்ததால் அசோக் லைலாண்டு நிறுவனம் உடனடியாக க்ளைம் செய்ய முடிவதில்லை. அதனால் இழப்பீட்டுத் தொகை 90 லட்சம் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த 90 லட்ச இழப்பீட்டுத் தொகைமீது தனிக்கவனம் செலுத்திய தாசில்தார் நாகராஜ், 90 லட்சத்தை எப்பாடியாவது எடுத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு போலியான வாரிசுகளை உருவாக்கியிருக்கிறார். இதற்காக ரமேஷ், பாரிவேல் என்பவர்கள் உதவியுடன், சூளகிரியில் பழனிச்சாமி, கவிதா என்பவர்களைத் தேடிப்பிடித்து அவர்கள் பெயரில் போலியான ஆவணங்கள் மற்றம் வங்கிக் கணக்குகளைத் தயார் செய்து 90 லட்சத்தை க்ளைம் செய்ய விண்ணப்பிக்கிறார். தாசில்தார் நாகராஜ் விருப்பப்படியே பழனிச்சாமி, கவிதாவின் பெயரில் 90 லட்சம் க்ளைம் ஆகிறது. 90 லட்சத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே தனது வங்கிக் கணக்குக்கு நாகராஜ் மாற்றியுள்ளார்.

கிருஷ்ணகிரி எஸ்பி மகேஷ்இவ்வளவு பெரிய தில்லாலங்கடி வேலை செய்த எம்.பி.நாகராஜ்க்கு அந்தச் சமயத்தில் ஆர்.டி.ஓ-வாக பதவி உயர்வு வந்து சேலத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஆர்டிஓ-வாக ஆறு மாதம் பணியாற்றிய பிறகு ஓய்வும் பெற்றார். இந்த நிலையில்தான் ஓய்வு பெற்றவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பலாம் என்ற சட்டத்தின் மூலம் மீண்டும் அதே நில எடுப்பு பிரிவுக்குத் தற்காலிக தாசில்தாராகக் கிருஷ்ணகிரி வருகிறார் நாகராஜ். அந்தச் சமயத்தில் 90  லட்சத்தை ஊழல் செய்ய போலியாகத் தயார் செய்த ஆவணங்களைக் கிருஷ்ணகிரி நில எடுப்பு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் எடுத்து எரித்துவிடுகிறார். அதேபோல பழனிச்சாமி மற்றும் கவிதா பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளை க்ளோஸ் செய்கின்றார். எந்த விதமான ஆவணங்களும் இல்லை என்றவுடன், ''தன்னால் முன்புபோல பணியாற்ற முடியவில்லை'' என்று கூறி பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார் எம்.பி.நாகராஜ். இந்த அளவுக்குப் புத்திசாலித்தனமாக ஊழல் செய்யும் எம்.பி.நாகராஜ் என்பவர் ஒருவர் இருக்கும்போது, அதைக் கண்டுபிடிக்க நேர்மையான அதிகாரி இல்லாமல் போய்விடுவாரா என்ன?

 கிருஷ்ணகிரி நில எடுப்பு ஆர்.டி.ஓ எச்.ரகமத் துல்லாகான் அலுவலக கோப்புகளை ஆய்வு செய்தபோது 90 லட்சம் இழப்பீடு வழங்கியதற்கான ஆவணம் மட்டும் காணாமல் போகவே அதிர்ச்சி அடைந்து தேடுகிறார். ஆனால், ஆவணங்கள் கிடைக்கவில்லை. விசாரணையைத் தொடங்கியபோது மொத்த ஊழலையும் கண்டுபிடித்து கிருஷ்ணகிரி கலெக்டர் டேபிள்மீது விசாரணை அறிக்கையை வைத்துள்ளார் ரகமத் துல்லாகான். 

அரசு அதிகாரியின் இந்த ஊழல்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கிருஷ்ணகிரி எஸ்.பி மகேஷ்குமாருக்கு பரிந்துரை செய்கிறார் கலெக்டர் கதிரவன். 90 லட்சம் ஊழலில் தொடர்புடைய நபர்களைக் கைது செய்ய கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு போலீஸார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.