வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (06/03/2018)

கடைசி தொடர்பு:16:20 (06/03/2018)

'குவார்ட்டர் வாங்கிக்கொடுத்தால் விடுகிறேன்'- இளைஞர்களைப் பதறவைத்த ரோந்து போலீஸ்

போலீஸ்

ரவுடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், அவருக்கு சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் கேக் ஊட்டிய புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இச்சம்பவத்தைப்போலவே தற்போது, அதே கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் ஏட்டு ஒருவர் ரோந்துப் பணியின்போது சந்தேகத்தின் பேரில் பிடித்த இளைஞர்களிடம், குவார்ட்டர் வாங்கிக்கொடுத்தால் விட்டுவிடுவதாகக் கூறியதும், அவர்கள் குவாட்டர் வாங்கி வந்து கொடுத்த பிறகு, அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டுச் செல்லும் காட்சியும் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவது, சேலம் காவல்துறையினர் மத்தியில் பெரும் சர்சையை ஏற்படுத்திவருகிறது.

சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணிபுரிந்துவருபவர், முத்துக்குமரேசன். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு செட்டிச்சாவடி பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தபோது, அங்கு சில இளைஞர்கள் சாலையோரம் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்த ஏட்டு, அந்த இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்றால் தனக்கு குவார்ட்டர் பாட்டில் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதையடுத்து, அந்த இளைஞர்களில் ஒருவர், அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒரு குவார்ட்டர் பாட்டில் வாங்கி வந்து கொடுத்துள்ளார். அந்த குவாட்டர் பாட்டிலை வாங்கித் தனது பைக்கில் வைத்துக்கொண்ட ஏட்டு, அந்த இளைஞர்களுக்கு மது அருந்த வேண்டாம் என்று அறிவுரை கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இவை அனைத்தும் வீடியோவாகப் பதிவுசெய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

இதுபற்றி கன்னங்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் தங்கவேல், ''இந்த வீடியோவை நானும் பார்த்தேன். சம்பந்தப்பட்ட இளைஞர்கள் யார் என்று தெரியவில்லை. தெரிந்தவுடன், அவர்களையும் அழைத்து விரிவாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.