வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (06/03/2018)

கடைசி தொடர்பு:15:54 (06/03/2018)

கைதிகள் திடீர் மோதல்... புழல் சிறையில் பதற்றம் 

புழல் சிறைச்சாலை

 சென்னைப் புழல் சிறையில் கைதிகள் மோதிக்கொண்டதால் இருவர் காயமடைந்தனர். இதனால், புழல் சிறையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

சென்னை மாங்காட்டை அடுத்த மலையம்பாக்கம் கிராமத்தில், பிரபல ரவுடி பினு, கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடி போலீஸாருக்கு அதிர்ச்சிகொடுத்தார். தொடர்ந்து, தலைமறைவான ரவுடிகளைக் கைதுசெய்யும் படலம் நடந்துவருகிறது. ரவுடி பினு, போலீஸாரிடம் சரணடைந்தார். அடுத்து, அவருடைய கூட்டாளிகள் விக்கி, கனகு ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வந்த 72 ரவுடிகள், ஒரே நாளில் கைதுசெய்யப்பட்டனர். இதனால், சென்னைப் புழல் சிறையில் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்தன. இதனால் மோதல் உருவாகும் சூழல் இருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்தது. 

 இந்தச் சூழ்நிலையில், புழல் சிறையில் இன்று கைதிகளுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், கொடுங்கையூரைச் சேர்ந்த தண்டனைக் கைதி ஜோசப் படுகாயமடைந்தார். தொடர்ந்து, பெண்கள் சிறையிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், காவலர் சசிகலா காயமடைந்துள்ளார். மோதலால் காயமடைந்த ஜோசப் மற்றும் சசிகலா ஆகியோர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, கைதிகளின் மோதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கைதிகள் மோதல்குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.