வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (06/03/2018)

கடைசி தொடர்பு:17:40 (06/03/2018)

`ஒதுக்கியது ரூ.200 கோடி; ஊழலோ பலகோடி' - அதிரவைக்கும் நெடுஞ்சாலைத்துறை ஊழல்

நெல்லைக் கோட்டத்துக்கு உட்பட்ட நெடுஞ்சாலைகளைச் செப்பணிடுவதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு ஒப்பந்ததாரர், தன் ஆதரவாளர்களுடன் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நெடுஞ்சாலைத்துறை

நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய நெடுஞ்சாலைத்துறைக் கோட்டத்தில் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் விடப்பட்டன. இந்த மூன்று மாவட்டங்களிலும் சாலைகளை ஒட்டுப் போட்டுப் பராமரிக்கும் பணிக்காக மட்டும் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணிக்கான டெண்டர் கோரப்பட்டதில், அரசு ஒப்பந்ததாரர்கள் பலரும் விண்ணப்பித்து இருந்தனர். 

டெண்டர் கோரப்பட்டதன் அடிப்படையில், அரசு ஒப்பந்ததாரர்களுக்குப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்தப் பணி ஒதுக்கீட்டில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அரசு முதன்மை ஒப்பந்ததாரரான கே.எம்.ஏ.நிஜாம் தலைமையில் அவரின் ஆதரவாளர்கள் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்தது குறித்து மனு அளிக்கச் சென்ற நிலையில், அதிகாரிகள் யாரும் அலுவலகத்துக்கு வரவில்லை. அதனால் கதவில் மனுவை வைத்துவிட்டுத் திரும்பினார்கள்.

இது குறித்துப் பேசிய அரசு ஒப்பந்ததாரரான கே.எம்.ஏ.நிஜாம், ``நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட சாலைகளைப் பராமரிக்க 200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான டெண்டர் விடப்பட்டத்தில், பல ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தப் புள்ளிகளை, காரணமே இல்லாமல் தள்ளுபடி செய்துவிட்டார்கள். ஆளுங்கட்சிக்கு சாதகமாகச் செயல்படும் நபர்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் கொடுக்கப்படுகின்றன. இது மோசமான நடவடிக்கையாக உள்ளது.

முற்றுகை

அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை அனைவருக்கும் 30 சதவிகிதம் வரை கமிஷன் கொடுக்கப்படுகிறது. அதனால் பணிகள் தரமற்றதாக இருக்கின்றன. நெல்லை-தென்காசி சாலையைப் பராமரிக்க 30 கோடி ரூபாய் செலவு செய்தும் அந்தச் சாலை 6 மாதம்கூட தாக்குப்பிடிக்கவில்லை. இதுபோல ஒவ்வொரு பணியிலும் முறைகேடுகள் நடக்கின்றன. இது தொடர்பாக என்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன. அதை அதிகாரியிடம் கொடுக்க வந்திருப்பதை அறிந்து யாருமே அலுவலகத்துக்கு வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது. அதிகாரிகள் செய்துள்ள டெண்டர் முறைகேடு தொடர்பாக வழக்கு தொடர இருக்கிறேன்’’ என்றார். 

சாலை பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தம் தொடர்பாக அரசு கான்ட்ராக்டரே வெளிப்படையாகக் குற்றம் சாட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விஜிலன்ஸ் துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்துள்ளது.