வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (06/03/2018)

கடைசி தொடர்பு:16:17 (06/03/2018)

`அவசரநிலை பிரகடனத்தால் டி20 போட்டி நடைபெறுவதில் சிக்கல்' - என்ன சொல்கிறது பி.சி.சி.ஐ?

இலங்கையில் 10 நாள்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் இந்தியா - இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி நடப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு தற்போது பி.சி.சி.ஐ விளக்கம் அளித்துள்ளது.

பிசிசிஐ

இலங்கை கண்டி மாநகர் அருகே உள்ள அம்பாரா என்ற பகுதியில் நேற்று முன்தினம் இஸ்லாமியர் கடைகள், வர்த்தக நிறுவனங்களை மர்மக் கும்பல் அடித்து நொறுக்கியதுடன், முற்றிலுமாகச் சேதப்படுத்தியது. இதற்காகச் சிலரை போலீஸார் கைது செய்தனர். புத்த மதத்தினர்தான் இத்தகைய தாக்குதலை நடத்தியுள்ளனர் எனக் குற்றம்சாட்டவே, தற்போது இது மதரீதியான கலவரத்தை உண்டாக்கியுள்ளது. இதையடுத்து கண்டி மாநகரில் 10 நாள்களுக்கு அவசரநிலை அமல்படுத்துவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.  இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் இன்று தொடங்கவுள்ளது. கொழும்புவின் பிரமேதாச ஸ்டேடியத்தில் இன்று இரவு இந்தியா - இலங்கை இடையே முதல் போட்டி நடைபெறவுள்ள நிலையில், அவசர நிலை பிரகடனத்தால், போட்டி நடக்குமா எனச் சந்தேகம் நிலவிவந்தது. இதற்கு தற்போது பி.சி.சி.ஐ விளக்கம் அளித்துள்ளது. அதில், "கண்டியில் தான் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கொழும்புவில் அல்ல. வீரர்களுக்கான பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். கொழும்புவில் அமைதியான சூழ்நிலையே நிலவுவதால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் இருக்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க