வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (06/03/2018)

கடைசி தொடர்பு:18:00 (06/03/2018)

பனங்காட்டில் நாட்டுவெடிகுண்டுகளை சல்லடைபோட்டுத் தேடிய போலீஸ்!

நெல்லை மாவட்டம் கூத்தங்குழி கடற்கரைக் கிராமத்தில், நாட்டுவெடிகுண்டுகள் பதுக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நெல்லை மாவட்ட போலீஸார் அதிரடிச் சோதனை நடத்தினார்கள்.

நாட்டு வெடிகுண்டுகள் சோதனை

நெல்லை மாவட்டம், கூடன்குளம் அருகே உள்ளது கூத்தன்குழி கடற்கரைக் கிராமம். இந்தக் கிராமத்திலும் சுற்றிய கடலோரப் பகுதிகளிலும் கனிம மணல் அள்ளப்பட்டுவந்தது. அதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கனிம மணல் ஆலை நிர்வாகத்தினர் உள்ளூர் மக்களை இரு பிரிவுகளாகப் பிரித்து வைத்ததுடன், ஒரு குழுவினருக்கு பண உதவியும்  செய்துவந்தனர். கடந்த பல வருடங்களாக நடந்த இந்தச் சம்பவம் காரணமாக, இப்போதும் இந்தக் கிராமத்தில் உள்ள மீனவர்கள் இரு குழுக்களாகவே பிரிந்து கிடக்கின்றனர். 

இந்தக் குழுக்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. இந்தக் குழுக்கள் மோதும்போது, வெடிகுண்டுகள் வீசி தங்களுடைய பலத்தை நிரூபிப்பதும் நடைமுறையாக இருந்துவருகிறது. அத்துடன், பொது இடங்களில் வெடிகுண்டுகளை வீசி, ஒவ்வொரு குழுவினரும் தங்களின் பலத்தை வெளிப்படுத்துவார்கள். கடந்த சில வருடங்களாக வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் இந்தப் பகுதியில் நடைபெறவில்லை. 

வெடிகுண்டு சோதனை

இருப்பினும், அவ்வப்போது இந்தக் கிராமத்தில் வெடிகுண்டு சோதனை நடத்துவது வழக்கம். ஏற்கெனவே, பலமுறை நடத்தப்பட்ட சோதனைகளின்போது, நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், கூத்தங்குழி பனங்காட்டுப் பகுதியில் நாட்டுவெடிகுண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட காவல்துறையினருக்குத் தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து, வள்ளியூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கனகராஜ் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், பொன்முருகன் உள்ளிட்ட 30 பேர் கொண்ட குழுவினர், கூந்தங்குழி சென்று சோதனை நடத்தினார்கள்.

கூத்தங்குழி கடற்கரை, அங்குள்ள காட்டுப் பகுதி, ஊருக்குப் பொதுவான கட்டடங்கள் என அதிரடியாகப் பல மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். ஆனால், சோதனையில் எந்தவித வெடிகுண்டும் சிக்கவில்லை. அதனால், காவல்துறையினர் நிம்மதி அடைந்தனர்.