வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (06/03/2018)

கடைசி தொடர்பு:19:40 (06/03/2018)

ஒரு வழிச் சாலைகளாக மாற்றியதால் கடையடைப்புப் போராட்டம் நடத்திய வியாபாரிகள்!

காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளை ஒரு வழிச் சாலைகளாக மாற்றியதைக் கண்டித்து, இன்று வியாபாரிகள் சங்கம் சார்பில் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதனால், காஞ்சிபுரம் நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

வியாபாரிகள் கடையடைப்பு

காஞ்சிபுரத்தின் முக்கிய பிரதான சாலைகளான காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன் சாலை, விளக்கடி கோயில் தெரு, மேட்டுத் தெரு ஆகிய சாலைகளில் அதிகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி, காஞ்சிபுரம் காவல்துறையினர்  முக்கிய சாலைகளை  ஒரு வழிச் சாலைகளாக மாற்றியமைத்துள்ளனர். இதனால், கடந்த 20 நாள்களாக அருகில் உள்ள இடத்துக்கு பல கி.மீ சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருவழிச் சாலையாக மாற்றியதால்,  பட்டுச்சேலை வியாபாரிகள், சிறு குறு வணிகர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாதிப்புகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸாரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காந்தி சாலை, ரயில்வே ரோடு, கீரை மண்டபம், மேட்டுத் தெரு, விளக்கடி கோயில் தெரு  ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இணைந்து, இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை முழுக் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைக் கலந்து ஆலோசிக்காமல் செய்யப்பட்ட திடீர் போக்குவரத்து மாற்றத்தால், வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வழிச் சாலைகளாக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் இருவழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, 2000-த்துக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால், காஞ்சிபுரம் நகரம் வெறிச்சோடிக்கிடக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க