வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (06/03/2018)

கடைசி தொடர்பு:19:17 (06/03/2018)

ரஜினியை இயக்குகிறவர்கள் யார்? எம்.ஜி.ஆர் சிலை திறப்பின் பின்னணி

ரஜினி - எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழா

ரசியல் பிரவேசம் எடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், இப்போது தமிழகத்தின் மறைந்த முதல்வரும், திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவருமான எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசியுள்ளார். "தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை மீண்டும் அளிப்பேன்" என்று உறுதியளித்துள்ளார்.

"எம்.ஜி,ஆர். உயிரோடு இருந்தவரை அவரைப் பற்றியும், அவரின் ஆட்சி பற்றியும் ரஜினி பேசியிருப்பாரா அல்லது அவருக்குப் பின் அ.தி.மு.க-வை வழிநடத்திய ஜெயலலிதா இருந்தவரை, எம்.ஜி.ஆர் பற்றி ரஜினி வாய் திறந்தாரா?" என்று அரசியல் ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

ரஜினியின் கூற்றைப் பார்த்தால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியை அளிக்கவில்லையா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. மேலும் 'ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, ரஜினி ஏன் எம்.ஜி.ஆர் பற்றியும், அவரின் ஆட்சி பற்றியும் வெளிப்படையாகப் பேசவில்லை?' 'தி.மு.க தலைவர் கருணாநிதியிடம், தான் அரசியல் கற்றுக்கொண்டதாகக் கூறிக்கொள்ளும் ரஜினிகாந்த், தற்போது ஒருவேளை கருணாநிதி நல்ல உடல் நிலையுடன் தீவிரச் செயல்பாட்டில் இருப்பாரேயானால், அரசியலுக்கு ரஜினி வந்திருப்பாரா?' என்பன போன்ற ஏராளமான கேள்விகள் ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் எழுகின்றன.

ரஜினி - எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா

புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தின் மருத்துவக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் ரஜினியின் அரசியல் பிரவேசப் பேச்சு என்பது 'ஏற்கெனவே திட்டமிடப்பட்டதுதான்' என்றே கூறுகிறார்கள் சென்னையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள். 

"தமிழக மக்கள் மத்தியில், 1996-ம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய அ.தி.மு.க. அரசின் மீதான ஒட்டுமொத்த வெறுப்பும் எதிரொலித்ததன் காரணமாகவே, தி.மு.க - த.மா.கா. கூட்டணி தமிழ்நாட்டில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்ற முடிந்தது. அந்த நேரத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி காரணமாகவும், போயஸ்கார்டனில் ரஜினி தன் காரில் செல்வதற்கு கெடுபிடிகள் விதிக்கப்பட்டதன் காரணமாகவும் ஜெ. அரசின் மீது ரஜினிகாந்த் கடுமையான அதிருப்தியில் இருந்தார். அதன் நீட்சியாக 'பாட்ஷா' பட விழாவில் வெடிகுண்டு கலாசாரம் தமிழகத்தில் அதிகரித்து விட்டதாகப் பேசியதும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலின்போது, 'ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்று ரஜினிகாந்த் சொன்னதும், அப்போது தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் உருவாகக் காரணமாக அமைந்தது. 1996 தேர்தலில் அவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என்று ஏன் கருணாநிதியோ, த.மா.கா. தலைவர் மூப்பனாரோகூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனாலும், அதன் பின்னர் நடைபெற்ற 1998 மற்றும் 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின்போது ரஜினி, 'ரசிகர்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்' என்று கூறிக்கொண்டதோடு நிறுத்திக்கொண்டார்.

ஏ.சி. சண்முகம் பின்னணி?

ரஜினி1996-ம் ஆண்டு ரஜினியின் வாய்ஸூம் தி.மு.க - த.மா.கா. வெற்றிக்கு உதவியது. என்றாலும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும், அதன் பின்னர் அந்தக் காலகட்டத்தில் ரஜினி மன்றங்களை, தொடர்ந்து வளரவிடாமல் தி.மு.க-வினர் பல்வேறு ஊர்களில் தாக்குதலில் ஈடுபட்ட வரலாறும் உண்டு. அதன் பிறகு தி.மு.க மற்றும் அ.தி.மு.க. என மாறி, மாறி தமிழகத்தில் இரு கழகங்களின் ஆட்சி நடந்தபோதெல்லாம் தங்களின் தொழில் (சினிமா) பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வாய்மூடி மௌனிகளாக இருந்தவர்கள்தாம் இதே ரஜினியும் கமல்ஹாசனும்.

தவிர, ரஜினி பேசிய விழா நடைபெற்ற எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், புதிய நீதிக்கட்சித் தலைவருமான ஏ.சி. சண்முகத்தின் பின்னணியையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் இருமுறை எம்.எல்..ஏ-வாகவும், ஒருமுறை எம்.பி.யாகவும் இருந்தவர் ஏ.சி.எஸ். பின்னர், ஜெயலலிதா அ.தி.மு.க. தலைமைப் பொறுப்பேற்ற பின்னர், புதிய நீதிக்கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்து, தான் சார்ந்த சமூகத்தினர் மத்தியிலேயே அதிக வாக்குகளைப் பெற முடியாமல் தோல்வியடைந்தார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணியில் இடம்பெற்று, மக்களவைக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னர், நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலிலும் பி.ஜே.பியுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டார் ஏ.சி. சண்முகம். எனினும் அவரால் எம்.எல்.ஏ-வாகக்கூட வெற்றிபெற முடியாமல் போனது.

ரஜினி பின்னணியில் பி.ஜே.பி.?

பி.ஜே.பி-யுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்து வரும் ஏ.சி.சண்முகம் மூலம் ரஜினியை மத்திய அரசு இயக்கி வருவது நேற்றைய அவரின் பேச்சு மூலம் உறுதியாகியிருக்கிறது என்பதே உண்மை. தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை நிரப்பப் போவதாகக் கூறிக்கொள்ளும் ரஜினிகாந்த்-க்கு பி.ஜே.பி-யின் ஆசி உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, மத்திய அரசைப் பற்றியோ, ஜி.எஸ்.டி போன்ற மக்களை பிரச்னைகள் பற்றியோ அவர் நேற்று ஒருவார்த்தைகூட பேசவில்லை.

'ஆன்மிக அரசியல்' என்று ரஜினி கூறிக்கொண்டிருக்கும் நேரத்தில், நடிகர் கமல்ஹாசனோ தன்னுடைய அரசியலில் 'திராவிடம்' இருக்கும் என்கிறார். இதன்மூலம் கமல்ஹாசனுக்கு தி.மு.க. நேரடியாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும். தி.மு.க. அனுதாபிகள் முழுவதுமாக அவரை ஆதரிக்கிறார்கள் என்பதே உண்மை. எனவே, எதிர்காலத்தில் கமல்ஹாசன் தி.மு.க-வுடன் நேரடிக் கூட்டணி வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

தினகரன் சுற்றுப்பயணம்

ரஜினி, கமல் என தமிழக அரசியல் களேபரப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில்தான் 'சைலன்ட்' ஆக டி.டி.வி. தினகரன் ஒருபுறம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருக்கிறார். தி.மு.க-வில் மு.க. ஸ்டாலின் தலைமையை விரும்பாமல் அதிருப்தியில் இருப்பவர்களும், தி.மு.க அனுதாபிகளும் தினகரன் அணியில் சேர்ந்து வருவதையும் நாம் பார்க்க வேண்டும். தவிர, எடப்பாடி - ஓ.பி.எஸ். தலைமையை விரும்பாமல் இந்த அரசின் மீது அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க-வினரும் தினகரனை ஆதரிக்கிறார்கள். ரஜினியின் எம்.ஜி.ஆர் ஆட்சி பற்றி கருத்துத் தெரிவித்த டி.டி.வி. தினகரன், 'யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யாருடைய வரவும் தங்களின் வளர்ச்சியைப் பாதிக்காது' என்றார். 

டி.டி.வி.தினகரன்தமிழகத்தில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமைக்கு இடையே மக்களின் அடிப்படைப் பிரச்னைகளில் ஆளும் அரசு எவ்விதக் கவனமும் செலுத்தாமல் உள்ளது. கோடை காலம் வெகுவிரைவில் தொடங்கவிருக்கும் சூழலில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர்ப் பிரச்னை ஏற்படாமல் தடுக்க, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றியெல்லாம் ஆளும் அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. எவ்வளவு காலம் ஆட்சியில் இருக்கப்போகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாத சூழலில்தான் தமிழ்நாட்டில் ஒரு அரசு கடமைக்குச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது" என்கின்றனர் அரசியலை உற்றுக் கவனித்து வரும் பத்திரிகையாளர்கள்.

வாக்காளர்களின் தீர்ப்பே இறுதியானது!

தமிழகத்தில் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் பொதுமக்கள், தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் உள்ளனர். தங்களின் தலைவராக யார் வர வேண்டும்; தங்களை யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் தமிழக வாக்காளர்கள். அவர்கள் வாக்குச்சீட்டுகள் மூலம் என்ன முடிவை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை, அடுத்தடுத்து இதுபோன்ற அரங்கேற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும். எம்.ஜி.ஆர். ஆட்சியை யார் அளிப்பார்கள் என்பதை கிராமப்புறங்களில் கடைக்கோடியில் உள்ள மக்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள சாமான்ய மக்கள் முடிவு செய்வார்கள்.

தேர்தல் என்று வந்தால், இதுவரை தமிழக மக்கள் எப்போதுமே தெளிவான தீர்ப்பையே அளித்துள்ளனர் என்பதுதான் கடந்தகால வரலாறு. அந்த வரலாறு இனியும் தொடரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை....!

நீங்க எப்படி பீல் பண்றீங்க