வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (06/03/2018)

கடைசி தொடர்பு:18:40 (06/03/2018)

தினகரனும் ஓ.பி.எஸ் மகனும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும்? - உஷார்படுத்தும் உளவுத்துறை

தினகரன் - ஓபிஎஸ் மகன்- உளவுத்துறை

நாளை, கட்சி நிர்வாகிகள் பலரது வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வதற்காக, இன்று மாலை தேனி வருகிறார் டி.டி.வி.தினகரன். இன்று இரவு தேனியில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு, நாளை காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதந்த் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒருபுறம் என்றால், தேனி மாவட்டத்தில், கடந்த மாதம் முதல் தன்னை தீவிர அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டு, மாவட்டம் முழுவதும் வலம் வரும் துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்.

இந்நிலையில், எங்காவது ஓர் இடத்தில் இருவரும் நேர் எதிரில் சந்தித்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாக, மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாம் உளவுத்துறை. இதுகுறித்து உளவுத்துறை தரப்பில் விசாரித்தபோது, ‘’டி.டி.வி.தினகரனும் ரவியும் நேர் எதிரே சந்தித்துக்கொண்டால், இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உருவாகும். ஏனென்றால், கடைசியாக நடைபெற்ற கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில், டி.டி.வி.தினகரனை கடுமையாகத் தாக்கிப் பேசினார் ரவி. அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பெரியகுளத்தில் பிரச்னை ஏற்பட, தினகரன் ஆதரவாளரை ரவி தரப்பு ஆதரவாளர்கள் தாக்கினர். தாக்கப்பட்டவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ளார். இதையெல்லாம்வைத்துப் பார்க்கும்போது, நாளை இரு தரப்பும் மோதிக்கொள்ளும் நிலை உருவாகலாம். எனவே, காவல்துறை உயர் அதிகாரிகள், இருவரது புரோட்டோக்கால்களைச் சரிபார்ப்பது அவசியமாகிறது’’ என்றனர். இரு தரப்புக்கும் இடையே தேனியில் பேனர் மோதல் நடந்துவரும் சூழலில், டி.டி.வி.தினகரனின் தேனி வருகைக்கான பேனர்களைப் பெரும்பாலும் தேனியில் பார்க்க முடியவில்லை.