வெளியிடப்பட்ட நேரம்: 18:02 (06/03/2018)

கடைசி தொடர்பு:18:02 (06/03/2018)

ஹெச்.ராஜா கருத்துக்கு பா.ஜ.க பொறுப்பல்ல! சொல்கிறார் தமிழிசை

'தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என ஹெச்.ராஜா கூறியதற்கு பா.ஜ.க பொறுப்பேற்காது' என மாநிலத் தலைவர் தமிழிசை
சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த கால்நூற்றாண்டாக நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில்
மாற்றியது பா.ஜ.க. தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு மார்க்சிஸ்ட் ஆட்சியில் அங்கு அமைக்கப்பட்டிருந்த லெனின்
சிலையையும் அகற்றியது. இந்நிலையில், பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இன்று
காலை தன்னுடைய முகநூல் பக்கத்தில், 'திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில்
ஈ.வே.ராமசாமி சிலை' எனப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், `பெரியார் சிலை
குறித்து ஹெச்.ராஜா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து. இதற்கும் பா.ஜ.க-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ எனக்
கூறியுள்ளார்.

பெரியார் குறித்து ஹெச்.ராஜா ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த கருத்து தற்போது நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.