பிளேடால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்! திருமணமான 30 நாளில் நடந்த சோகம் | A young woman who suicide by cut the hand

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (06/03/2018)

கடைசி தொடர்பு:19:20 (06/03/2018)

பிளேடால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்! திருமணமான 30 நாளில் நடந்த சோகம்

திருமணம் ஆன ஒரு மாதத்தில், இளம்பெண் தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே நடந்துள்ளது.

இளம்பெண்

உடையார்பாளையம் அருகே, தா.குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர், பெரியசாமி. இவர், சிங்கப்பூரில் வேலைபார்த்துவருகிறார். கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் வீட்டுக்கு வந்துள்ளார். இவருக்கும் மேலசெங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த வைதேகிக்கும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வைதேகி, பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். அப்போது, பெரியசாமியைத் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் மணம் முடித்துள்ளார். இருவரும் திருமணம் ஆன நாளிலிருந்து சேர்ந்து வாழாமல் ஒரே வீட்டில் வசித்துவந்துள்ளனர், இந்நிலையில் நேற்று, வீட்டில் அனைவரும் தூங்கியதும், நள்ளிரவில் கையை பிளேடால் அறுத்துக்கொண்டு, வீட்டின்  அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

காலையில், வைதேகியைக் காணவில்லை எனத் தேடியபோது, கிணற்றில் அவரது உடல் கிடந்தது தெரியவந்துள்ளது. இதை அடுத்து, உடையார்பாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு துறையினர் மூலம் உடலை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து, பெரியசாமியைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இளம்பெண் தற்கொலை

அதேபோல, ஆண்டிமடம் அருகே உள்ள மண்ணாங்கோரை கிராமத்தில், செபஸ்தியான் என்பவரது தைல மரத்தோப்பில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத பெண், அழுகிய நிலையில் சடலமாக மிதந்தார். இறந்தவர் யார், எந்த ஊர், ஏன் இங்கு வந்து இறந்தார், தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலைசெய்து கொண்டுவந்து போட்டனரா என்று பல கோணத்தில் ஆண்டிமடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.  அரியலூர் மாவட்டத்தில், கடந்த மூன்று மாதத்தில் 9 தற்கொலைகள் நடந்துள்ளன.