`வெளிநாட்டில் வேலை; கை நிறையச் சம்பளம்'‍ - ஆசைவார்த்தை கூறி பல கோடிகளைச் சுருட்டியவர் சிக்கினார்!

வேலை மோசடி

தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடம் பணம் பறித்து மோசடி செய்த ஹக்கீம் பாஷா என்பவரை பாதிக்கப்பட்டவர்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து முருகேசன் என்பவர் நம்மிடம் பேசும்போது, ``என் மகன் சுதனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ஹக்கீம் பாஷா என்பவர், தெரிந்தவர் ஒருவர் மூலம் அறிமுகம் ஆனார். என் மகன், டிப்ளமோ மெக்கானிக்கல் படித்திருப்பதால் வெளிநாட்டில் வேலை பார்த்தால் கை நிறையச் சம்பளம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தைக் கூறி என்னிடம் 3 லட்சம் ரூபாய் வாங்கினார். பணம் வாங்கிய பிறகு, எங்களைத் தொடர்புகொள்வதைக் குறைத்துக்கொண்டார் ஹக்கீம். நாங்கள் அழுத்தம் கொடுத்த பிறகு, அசோக்குமார் மற்றும் கிசோர் என்ற இருவர் எங்களைத் தொடர்புகொண்டு `உங்கள் பணத்துக்கு நாங்கள் பொறுப்பு’ என்று கூறி மீண்டும் 50,000 கேட்டனர். அதையும் கொடுத்தோம். பிறகு மூவரும் காணாமல் போய்விட்டனர்.

பிறகு தான், இந்த மூவரும் தேனி மாவட்டத்தில் பலரை இதுபோல ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று இரவு தேனிக்கு ஹக்கீம் வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனே பாதிக்கப்பட்டவர்கள் 60-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தோம். இன்று மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மூவர் மீது பாதிக்கப்பட்ட அனைவரும் புகார் மனு தெரிவித்தோம். காவல்துறையினர் இவ்விவகாரத்தில் தலையிட்டு எங்கள் பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்`` என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!