வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (06/03/2018)

கடைசி தொடர்பு:18:20 (06/03/2018)

கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் காவல் - சி.பி.ஐ கிடுக்கிப்பிடி!

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டுக்கான அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், கார்த்தி சிதம்பரம்மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. 

கார்த்தி சிதம்பரம்

வழக்கின் அடிப்படையில், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனைகள் நடைபெற்றன. இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதைத் தடுக்கும்விதமாக, அவர்மீது லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவர் 10 நாள்கள் லண்டன் செல்ல அனுமதி வழங்கினார்கள். அதன்பிறகு, அவர் லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், கடந்த வாரம் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அவரை கைது செய்த சி.பி.ஐ அதிகாரிகள், விசாரணைக்காக டெல்லி அழைத்துச் சென்றனர். 

இதன்பின் பாட்டியாலா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விசாரிக்க, சி.பி.ஐ தரப்பில் 15 நாள் காவல் கேட்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் ஒருநாள் மட்டுமே அனுமதி வழங்கியது. இதையடுத்து, அவரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை என்று சி.பி.ஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதிகாரிகளின் கேள்விகளுக்கு சரியாகப் பதில் அளிக்காமல், அவர் முரண்டு பிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, இன்று மீண்டும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு, 'காவலை நீட்டிக்க வேண்டும்' என்று சி.பி.ஐ தரப்பில் கோரப்பட்டது. கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் 3 நாள்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க