வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (06/03/2018)

கடைசி தொடர்பு:22:40 (06/03/2018)

எஸ்.ஐ - வழக்கறிஞர் மோதல்! காவல் நிலையத்தில் நடந்த களேபரம்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளருக்கும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருக்கும் நடந்த மோதலால் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காவல் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள அரசூர் பூச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர், பெரியசாமி. இவர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார். பூச்சிக்காட்டில் உள்ள ஒருவருக்கு ஏற்பட்ட நிலப் பிரச்னை தொடர்பாக, அவர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் சுந்தரம் என்பவரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அப்போது வழக்கறிஞர் பெரியசாமி, தான் அளித்த புகார் மனுவிற்கான ஒப்புதல் ரசீதைத் தருமாறு கேட்டுள்ளார்.

இதில், உதவி ஆய்வாளர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இதில் இருவருமே காயம் அடைந்தனர். தகவல் அறிந்த சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், காவல் நிலையம் முன்பு கூடினர். இதையடுத்து, சாத்தான்குளம் டி.எஸ்.பி., பாலச்சந்திரன் தலைமையில் நாசரேத், மெய்ஞானபுரம் காவல் நிலைய ஆய்வாளர்களும் கூடினர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நீண்டது. ஒருகட்டத்தில் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வழக்கறிஞர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். 

மோதலில் காயமடைந்த வழக்கறிஞர் பெரியசாமி, உதவி ஆய்வாளர் சுந்தரம் ஆகியோர், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மோதல்குறித்து இருவரும் அளித்த புகாரின்படி, சாத்தான்குளம் டி.எஸ்.பி., பாலச்சந்திரன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். காவல்நிலையத்தில் வழக்கறிஞரும் உதவி ஆய்வாளரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க