அரசியலுக்காக எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துகிறாரா ரஜினி?

ரஜினி

டிகர் ரஜினிகாந்த், தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்காத நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற கல்லூரி விழாவில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பப் போவதாகச் சூளுரைத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியை, தான் உருவாக்கப்போவதாகவும் தன் பேச்சில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் அரசியல் குறித்த பேச்சுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்களும், அவருடைய மன்ற நிர்வாகிகளும் ரஜினியின் இந்த அரசியல் கருத்துகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்று அறிய முற்பட்டோம்.

நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரனிடம், “இன்று அரசியலுக்கு வரும் பலரும் ‘சிவாஜியால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை’ என்று சொல்வதுடன், எம்.ஜி.ஆரைப் பற்றியே பேசுகிறார்களே... இதற்கு என்ன காரணம்?’’ என்று கேட்டோம். 

“அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு நடிகர்களும் விதிவிலக்கல்ல. ஆனால், இப்போது அரசியலுக்கு வரும் நடிகர்களைப் பார்த்து... பலரும், ‘சிவாஜியால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை’ என்று கூறுவதுதான் ஃபேஷன் ஆக இருக்கிறது. அதுமட்டுமன்றி நடிகர் திலகத்தோடு, பாக்யராஜையும், டி.ராஜேந்தரையும்கூட ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். திரையுலகிலும் சரி... அரசியலிலும் சரி... சிவாஜி சுயம்புவாக வளர்ந்தவர். 

கே.சந்திரசேகரன்அரசியலைப் பொறுத்தவரை, பெரியார் மற்றும் அண்ணாவோடு பழகி அரசியல் செய்தவர். அவர், தனிக்கட்சி தொடங்கியது, தமிழகத்தில் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதற்காக அல்ல... எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர், அவரால் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகத்தான். எம்.ஜி.ஆரின் மறைவைத் தொடர்ந்து, 1989-ம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டசபைத் தேர்தலில் சிவாஜி தோற்றதும்கூட, எம்.ஜி.ஆர் மனைவி வி.என். ஜானகியின் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், அந்தத் தேர்தலில் தோற்றது சிவாஜி மட்டுமல்ல... எம்.ஜி.ஆரின் மனைவியும்தான். அதன்பிறகு, ஜனதா தளத்தின் தமிழகத் தலைவராகவும் மதிப்புடனேயே திகழ்ந்தார் நடிகர் திலகம். திரையில் சிறப்பாக நடித்த தன்னால், அரசியல் மேடையில் நடிக்க முடியாது என்பதற்காக, அவராகவே அரசியலைவிட்டு விலகினார். இந்தப் பித்தலாட்ட அரசியல் பிடிக்காமல்தான் சிவாஜி அரசியலைவிட்டே ஒதுங்கினார். 

அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதற்காக எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்த ஜெயலலிதாகூட, பின்னர் அதே கட்சியைத் தன் பெயர் சொல்லுமளவுக்குத்தான் வளர்த்தார். எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி தொடங்கிய லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரும், எம்.ஜி.ஆராலேயே தன் கலை வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்யராஜும் அரசியலிலிருந்தே காணாமல் போனார்கள். இப்படி, எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்தவர்கள் யாரும் வளர்ந்ததாக வரலாறு இல்லை. அந்த வரிசையில் இன்று ரஜினிகாந்தும் சேர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் மீது இதுவரை ரஜினிக்கு வராத பாசம், இப்போது கட்சி ஆரம்பிக்கும்போது திடீரென்று வந்திருக்கிறது. இதுவரை தன்னை சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொண்ட ரஜினி, இப்போது சாமர்த்தியமாக அரசியலில் தனக்கு எம்.ஜி.ஆர்தான் வழிகாட்டி என்று கூறிக்கொள்கிறார். இதே எம்.ஜி.ஆரால் ஒருகட்டத்தில் விரட்டி, விரட்டிப் பழிவாங்கப்பட்ட ரஜினிகாந்த்தை, நடிகர் திலகம்தான் பலநேரங்களில் காப்பாற்றினார் என்பது அவருடைய மனசாட்சிக்குத் தெரியும். சரி, அப்படி ‘எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்பேன்’ என்று கூறும் ரஜினி, தமிழகத்தில் எம்.ஜி.ஆரே தூய்மையான ஆட்சியைத் தந்தாரா என்றால், அதுவும் கேள்விக்குறியே’’ என்றார் சந்திரசேகரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!