வெளியிடப்பட்ட நேரம்: 19:02 (06/03/2018)

கடைசி தொடர்பு:19:02 (06/03/2018)

செலவில்லாமல் அரசியல் கூட்டத்தை நடத்திவிட்டாரா ரஜினி?

ரஜினி

"தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை... போருக்குத் தயாராகுங்கள்" என தன் ரசிகர்களிடம் சொல்லி அரசியலுக்கு வருவதற்கான ஆரம்பப்புள்ளியைக் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய நடிகர் ரஜினிகாந்த், தொடர்ந்து அரசியலில் களமிறங்குவது குறித்து தன்னுடைய நண்பர்களிடமும், அரசியல் பிரபலங்களிடமும் ஆலோசனை நடத்திவந்தார். தன் ரசிகர்களைக் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் சந்தித்த ரஜினிகாந்த், ‘‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது, காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபைத் தேர்தலுக்கு முன் தனிக்கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்’’ என தன்னுடைய முடிவைத் தெளிவாக அறிவித்தார். 

இவருடைய அறிவிப்பால் சில அரசியல் கட்சிகள் ஆட்டம் கண்டன. எனினும், அவருடைய அரசியல் வருகைக்கு ஆதரவும், அதே அளவுக்கு எதிர்ப்பும் கிளம்பின. இருந்தாலும், அவர் அதைப்பற்றிக் கவலைப்படாமல் கட்சி தொடங்குவதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளார். தொடர்ந்து அரசியல் பற்றிய கருத்துகளைப் பதிவிட்டு வருவதுடன், மாவட்ட நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார். இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தைப் போக்கும்வகையில் நடிகரும், ரஜினியின் நண்பருமான கமல்ஹாசனும் தீவிர அரசியலில் இறங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். 

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வீட்டிலிருந்து தன் அரசியல் பயணத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், மீனவர்களைச் சந்தித்து பேசினார். தொடர்ந்து, ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அன்று மாலை மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சியையும், கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். கமல் சென்ற இடங்களில் எல்லாம் பேனர்கள், மேடைகள், தோரணங்கள் அமைத்து, அதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து பிரம்மாண்டமாய் ஏற்பாடுகள் செய்திருந்தனர், அவரின் நிர்வாகிகள். அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய அ.தி.மு.க-வால் விலக்கிவைக்கப்பட்ட டி.டி.வி.தினகரனும், கடந்த ஆண்டு திருச்சியில் பிரம்மாண்டமாய்ச் செலவு செய்து பொதுக் கூட்டம் நடத்தினார். அங்கு கூடிய மக்கள் வெள்ளத்தைக் கண்டு ஆளும் தரப்பே ஆச்சர்யமடைந்தது. அதேபோல், ஆளும் அ.தி.மு.க-வும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்கிற பெயரில் பிரம்மாண்டமாய்ச் செலவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் செலவே இல்லாமல் தன்னுடைய அரசியல் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் என்று பலதரப்பாலும் சொல்லப்படுகிறது. சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்துவைத்ததுடன், அரசியல் பற்றியும் நிறையப் பேசினார். அரசியல் அறிவிப்புக்குப் பிறகு ரஜினிகாந்த் பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி என்பதால், அவரைக் காண ரசிகர்களும், பொதுமக்களும் சாலையின் இரு பக்கத்திலும் திரண்டிருந்தனர். ரஜினியை வரவேற்க அவருடைய மக்கள் மன்றத்தினர் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் கொடிகளுடன் திரண்டனர். திரண்டிருந்த ரசிகர்களைப் பார்த்து காரில் இருந்தவாறு ரஜினி கையசைத்தார். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் கோயம்பேட்டில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்த பல்வேறு தரப்பினர், ‘‘எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழா என்று கூறிக் கொண்டாலும், இந்த நிகழ்வு ரஜினி அரசியல் பிரவேசத்தின் தொடக்கத்துக்கான ஒரு புள்ளியாகவே கருதப்படுகிறது. பிரம்மாண்டமாய்ச் செலவு செய்து மாநாடு போட்டு, பல்வேறு தரப்பினரும் புதிய கட்சியை ஆரம்பிக்கிறார்கள். மேலும், ஓர் அரசியல் கூட்டம் என்றாலும்கூட நிறையச் செலவு செய்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்த் எந்தச் செலவும் செய்யாமல், ஒரு சிலை திறப்பு விழாவில் தன் ரசிகர்கள்  கூட்டத்தைக் கூட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் வியக்கும் அளவுக்கு கட்சிக்கான தொடக்கவிழா போன்று பிரம்மாண்டத்தையே வெளிப்படுத்திவிட்டார். எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் கூடிய கூட்டம் அவருடைய அரசியலுக்காகக் கூடிய கூட்டமாகவே இருந்தது. அதுமட்டுமல்லாது, அந்த விழாவில் ரஜினி பேசியதும் அரசியலைப் பற்றியே இருந்தது. அதனால், ரஜினி ஆரம்பிக்க இருக்கும் கட்சிக் கூட்டத்துக்கான முன்னோட்டமாகவே நேற்றைய  விழா இருந்தது’’ என்கின்றனர் மிகத் தெளிவாக.

எப்போ வருவார், எப்படி வருவார் என்று தெரியாமல் இருந்த சூழலில், ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தும் விழாவாகவே நேற்றைய நிகழ்ச்சி இருந்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்