காதல் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதிக்கு பஞ்சாயத்தில் நடந்த கொடுமை!

காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணை பஞ்சாயத்தில் நிறுத்தி, அந்தப் பெண்ணின் உமிழ்நீரை அனைவரது முன்னிலையிலும் சுவைக்கச் செய்து அவமானப்படுத்தியுள்ளனர் பரிஹார கிராம மக்கள். 

காதல் திருமணம்

பீகார் மாநிலம், சுபால் மாவட்டத்தில் உள்ள பரிஹார கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜூலி குமாரி (19 )யும்  ரஞ்சித் குமாரும் (22) காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி, கடந்த பிப்ரவரி 16-ம் தேதி, அருகில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். அதையடுத்து, அதிகாரபூர்வமாக அவர்களின் திருமணத்தை பிப்ரவரி 26-ம் தேதி பதிவுசெய்துள்ளனர். 

முதலில், இரு வீட்டாரும் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், திருமணம் முடிந்து கிராமத்துக்குத் திரும்பிய வர்களை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில், ஜூலி குமாரி-ரஞ்சித் குமார் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தினர், காதல் திருமணம் செய்துகொண்டதற்காக இந்த ஜோடியைத் தண்டிக்கும் விதமாக பஞ்சாயத்தைக் கூட்டி, ரஞ்சித் குமாரை தோப்புக்கரணம் போடவைத்துள்ளனர். அதுமட்டுமன்றி, ஜூலி குமாரியின் உமிழ்நீரைச் சுவைக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். 

காதல் திருமணம் செய்தவர்களை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளனர். கடந்த மார்ச் 1-ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதன்பின், வைரலாகப் பரவிய இந்த வீடியோமூலம் தகவலறிந்த அப்பகுதி போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!