'உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் ஹெச்.ராஜா'- திருநாவுக்கரசர் காட்டம்!

பெரியார் சிலைகுறித்த ஹெச்.ராஜாவின் கருத்துக்கு திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர்

பா.ஜ.க-வின் அகில இந்தியச் செயலாளர் ஹெச்.ராஜா, இன்று காலை தன்னுடைய முகநூல் பக்கத்தில், 'திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை, தமிழகத்தில் பெரியார் சிலை' எனப் பதிவிட்டிருந்தார். இவரின் கருத்து, தமிழகத்தில் அடுத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் என அனைத்து தலைவர்களும் ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஹெச்.ராஜாவின் இந்தச் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்கிற விதத்தில் பேசியிருப்பது கண்டனத்திற்குரிய, தரக்குறைவான பேச்சாகும். தடித்த, தரமற்ற வார்த்தைகளால் அரசியல் கட்சிகளை, அரசியல் தலைவர்களை அடிக்கடி விமர்சனம்செய்வது என்பது அவரின் வாடிக்கையாகிவிட்டது. பெரியார் பற்றிப் பேசியதை தமிழ்நாட்டில் யாரும் ஏற்கவோ, ரசிக்கவோ மாட்டார்கள். ராஜா தன்னை மாற்றிக்கொள்வதும் திருத்திக்கொள்வதும், இதுபோன்ற தரமற்ற பேச்சுக்களை நிறுத்திக் கொள்வது, அவருக்கும் அவருடைய கட்சிக்கும் நல்லது. அவரின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!