வெளியிடப்பட்ட நேரம்: 18:27 (06/03/2018)

கடைசி தொடர்பு:18:45 (06/03/2018)

``பெரியாரின் சிலையை அசைக்கக்கூட முடியாது!’’ - ஹெச்.ராஜாவுக்கு சவால்விடும் ராமதாஸ்

தந்தை பெரியாரை அவமதித்த ஹெச்.ராஜாவை அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ராமதாஸ்


`திரிபுராவில் லெனின் சிலையை உடைத்துத் தள்ளியதைப் போன்று தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும்’  என்று ஹெச்.ராஜா முகநூலில் கூறிய கருத்துக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

“திரிபுரா மாநிலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் முன்னோடி லெனினின் சிலைகள் அகற்றப்படுவதைச் சுட்டிக்காட்டி, அதேபோல் தமிழகத்திலும் தந்தை பெரியாரின் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று முகநூல் பதிவு ஒன்றில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருக்கிறார். மேலும், தந்தை பெரியாரை சாதிவெறியர் என்றும் கொச்சைப்படுத்தியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

வினாச காலே விபரீத புத்தி என்பார்கள். அதற்கான சிறந்த உதாரணம்தான் ஹெச்.ராஜாவின் முகநூல் பதிவு ஆகும். தமிழ்நாட்டில் கோட்சேக்களின் சிலைகளைத் திறக்க வேண்டும் என்று கூறியவர்களிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ள ஹெச்.ராஜா போன்றவர்கள் எதையாவது பேசி அரசியல் விளம்பரம் மற்றும் பரபரப்பைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

தந்தைப் பெரியாரைப் பற்றி அநாகரிகமான விமர்சனங்களை ராஜா முன்வைப்பது இது முதல்முறையல்ல. கடந்த காலங்களில் இதேபோல் பலமுறை பேசியும் அதற்காக அவர்மீது ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே இதுபோன்று பேசும் துணிச்சல் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஹெச்.ராஜாவின் இத்தகைய அநாகரிகமான செயலை இனியும் அனுமதிக்கக் கூடாது; பெரியாரால் சுயமரியாதை பெற்றவர்கள் இனி அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் உரிமைகள் பறிக்கப்பட்டு, அடக்கி வைக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு சுயமரியாதையையும் சமூக நீதியையும் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். அவர் போராடி இருக்காவிட்டால் தமிழகத்தில் பறிக்கப்பட்ட சமூக நீதி பறிக்கப்பட்டதாகவே இருந்திருக்கும். இந்திய அரசியல் சட்டத்தில் முதலாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்காது. இதற்காகத் தந்தைப் பெரியாரை கோடிக்கணக்கான கரங்கள் வழிபடுகின்றன; கோடிக்கணக்கான வாய்கள் வாழ்த்துகின்றன. அத்தகைய பெரியாரின் சிலையை ஹெச்.ராஜா போன்றவர்களால் நெருங்கக்கூட முடியாது என்பதே உண்மை.

தந்தை பெரியார் சுயமரியாதையின் அடையாளம், சமூக நீதியின் அடையாளம், பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளம். இத்தகைய வலிமை மிக்க அடையாளத்தை அழிக்க கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. இனியும் எந்தக் கொம்பனாலும் தந்தை பெரியாரின் சிலையை அகற்றுவதற்கு அல்ல.... அசைக்கக்கூட முடியாது. அதைப் பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் தொண்டர்களும் அனுமதிக்கமாட்டார்கள். இதை அறைகூவலாகவே விடுக்கின்றனர்.

தந்தை பெரியார் என்ற ஆலமரத்தின் விழுதுகளின் ஒன்று என்று கூறிக்கொள்ளும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. பெரியாரின் வழி வந்தவர்களின் ஆட்சியில் அவரது சிலையை அகற்றுவோம் என்று கூற ஹெச்.ராஜா போன்றவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது என்பது தான் மிகப்பெரிய வினா. அ.தி.மு.க இடம் கொடுத்ததால் ஹெச்.ராஜா போன்றவர்கள் ஆட்டம் போடுகின்றனர். தந்தை பெரியாரின் சிலையை அகற்றப்போவதாகக் கூறிய ஹெச்.ராஜா அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் நல்லிணக்கத்தையும் சட்டம் ஒழுங்கையும் குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வரும் ஹெச்.ராஜாவை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க