வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (06/03/2018)

கடைசி தொடர்பு:23:00 (06/03/2018)

"ரயில் நிலையங்களில் நாங்கள் மனிதர்களாகவே பார்க்கப்படுவதில்லை!" - மாற்றுத்திறனாளிகள் வேதனை

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின்  சார்பில், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் தங்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரி, இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  


மாற்றுத்திறனாளிகள்

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இன்று,  ஒன்று திரண்ட மாற்றுத்திறனாளிகள், தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டுமென ஒருமணி நேரத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிறகு, நிலைய மேலாளரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவையும் அளித்தனர்.  இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட  அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் செயலாளர் சரவணனிடம் பேசினோம். " நாங்கள், ரயில் நிலையங்களில் மனிதராகவே மதிக்கப்படுவதில்லை. பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகித்தான், ரயில்களில் பயணிங்க வேண்டியிருக்கிறது. எங்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கேட்டாலும் மறுக்கப்படுகிறது. எங்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்" என்றவர், தங்களது கோரிக்கைகளைப் பட்டியலிட்டார். "அனைத்து நடை மேடைகளுக்கும் சென்று வர லிஃப்ட் வசதி, எங்களுக்கென்று டிக்கெட் வழங்க தனி கவுன்டர், அதை உயரம் தடைப்பட்ட மாற்றுத்திறனாளிகள் எளிதாக டிக்கெட் எடுக்க வசதியாக அமைக்க வேண்டும். தேவையற்ற காரணங்களைச் சொல்லி, எங்களது பாஸை நிராகரிக்கக் கூடாது. ரயில்வே துறை வழங்கும் மஞ்சள் அட்டையை வாங்கினால்தான் டிக்கெட் தருவோம் என்று சொல்லக் கூடாது.

பழைய பாஸை கொண்டுவந்தாலே எவ்வித காரணமும் சொல்லாமல் டிக்கெட் வழங்க வேண்டும். அனைத்து நடை மேடைகளுக்கும் சென்று வர பேட்டரி கார் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். ரயில் நிலையத்துக்கு வரும் எங்களின் வாகனத்தை நிறுத்த, தனியாக இலவச பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும். நாங்கள் எளிதாக  பயணம் செய்யும் ரயில் பெட்டிக்கு செல்ல வீல் சேர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வீல் சேரில் அமர்ந்து ரயிலில் ஏறுவது என்பது எங்களால் முடியாது. ரயிலின் அமைப்பு அவ்வாறு உள்ளது. ரயிலில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்களின் குறைகளைக் கேட்டறியும் மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். அக்கூட்டத்தில், மாற்றுத் திறனாளிக்களுக்கு சங்கப் பிரதிநிதிகளாகிய எங்களையும் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும்.

வெஸ்டன் கழிப்பறை அமைத்துத் தர வேண்டும். எங்களுக்கான பெட்டியில் பிற பயணிகள் குறிப்பாக, ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பாதுகாவலர்கள், காவல் துறையினர் என யாரும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பயணிப்பதைத் தடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளும் அவரது பாதுகாவலரும் பயணம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். ரயில் வருவதற்கு முன்னதாக எங்களுக்கான பெட்டி எந்த இடத்தில் வருகிறது என்பதை முன்பே  மைக்கில் அறிவிக்க வேண்டும். புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளின் மோட்டார் சைக்கிள், சைக்கிள் ஆகியவற்றை ரயிலில் ஏற்றிச்செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். திருச்சி ரயில் நிலையத்தில் வாகனங்களை ரயிலில் ஏற்றாமல் இறக்கிவிடுவதால், மாற்றுத்திறனாளிக்கள் மிகுந்த மனவேதனை அடைகின்றனர். இதனால் விபத்தும் ஏற்படுகிறது"என்றார்.