வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (07/03/2018)

கடைசி தொடர்பு:00:00 (07/03/2018)

இறுதிச்சடங்கு செய்யப்பட்டவர் உயிருடன் வந்த விநோதம்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர், ராமச்சந்திரன். 12 ஆண்டுகளுக்கு முன்பு விவகாரத்து செய்யப்பட்ட மனைவியின் பிரேதம் என நினைத்து இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அடுத்த சில நாள்களில் அவர் உயிருடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இறுதிச்சடங்கு

மயங்கிய நிலையில், அடையாளம் தெரியாத பெண்மணி ஒருவர், சில நாள்களுக்கு முன்பு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம், அவர் இறந்துவிட்டார். திருவிடைமருதூர் காவல்துறையினர், அந்தப் பிரேதத்தை திருபுவனத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனிடம் ஒப்படைத்து, இது உங்களது முன்னாள் மனைவி ஆஷாவின் பிரேதம் எனத் தெரிவித்திருக்கிறார்கள். மனநலம் சரியில்லாத நிலையில் இருந்த ஆஷா, பத்து நாள்களுக்கு முன்பு வரை திருபுவனம் பகுதியில்தான் சுற்றித்திரிந்திருக்கிறார்.

அதன்பிறகு அவர், இந்தப் பகுதியில் காணப்படவில்லை. அதனால், ஆஷாவின் பிணமாகத்தான் இருக்கும் என நினைத்து, காவல்துறையினர் தந்த பிரேதத்துக்கு இறுதிச்சடங்குகள் செய்திருக்கிறார் ராமச்சந்திரன். அடுத்த சில நாள்களில், புறவழிச்சாலை பகுதியில் ஆஷா சுற்றித்திரிந்ததைப் பார்த்துவிட்டு, இப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அப்படியென்றால், இறுதிச்சடங்கு செய்யப்பட்டவர் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருபுவனம் பகுதி மக்களிடம் நாம் பேசியபோது, 'விவாகரத்துசெய்யப்பட்ட மனைவியின் பிரேதம்தானா என்ற குழப்பம் ராமச்சந்திரனுக்கு இருந்துள்ளது. ஆனாலும், காவல்துறையினர் வலியுறுத்திச் சொன்னதால், அடையாளம் தெரியாத அந்தப் பிரேதத்தைப் பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கும் செய்தார். உண்மையில் இறந்தவர் யார் எனத் தெரியவில்லை” என்கிறார்கள்.