கையை இழந்த பீகார் சிறுவன்' - ஆளுங்கட்சி பிரமுகர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!

ஓமலூர் பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளர் மீது எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.

எஃப்.ஐ.ஆர்.

சமீபத்தில் சேலம் ஓமலூர் பகுதியில் செயல்பட்டு வந்த சூர்யா பிளாஸ்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த பீகார் சிறுவன் இயந்திரத்தில் கையை விட்டு உள்ளங்கை வரை உருக்குலைந்து விட்டது. கடந்த 28-ம் தேதி இந்த விபத்தை விகடன் இணையதளத்தில் ''சிறுவனை பணிக்கு அமர்த்திய ஆளுங்கட்சி பிரமுகர்..! கையை இழந்த பீகார் சிறுவன்'' என்ற தலைப்பில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் முரளி காவல்துறைக்கும், சட்டத்திற்கும் பயந்து அந்தச் சிறுவனுக்குச் சிகிச்சை கொடுக்காமல், மறைத்து வைத்திருக்கிறார் என்று எழுதி இருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 5-ம் தேதி ''நிர்மலாவை விசாரிக்கிறேன் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி விவகாரத்தில் அதிகாரி உறுதி'' என்ற தலைப்பில் நிறுவனத்தின் உரிமையாளர், ஆளுங்கட்சியினர் மற்றும் சைல்ட் ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் நிர்மலா ஆகியோர் சேர்ந்து தகவலை மறைக்க முற்படுகிறார்கள் என்றும் செய்தி வெளியிடப்பட்டது. அதில், சேலம் அரசு மருத்துவமனையில் அந்தச் சிறுவனுக்கு வயது பரிசோதனை நடைப்பெற்று வருகிறது. வயது பரிசோதனை ரிசல்ட் வந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் உறுதி அளித்திருந்தார். 

இந்நிலையில் இன்று (6/3/18) சேலம் அரசு மருத்துவமனை பீகாரைச் சேர்ந்த அந்தக் குழந்தை தொழிலாளி சைலேஷ்குமாருக்கு வயது 14 - 16க்கு இடைப்பட்ட காலம்தான் என்று ரிசல்ட் கொடுத்திருக்கிறது. இதுகுறித்து சேலம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் செல்வத்திடம் பேசிய போது, ''இந்தக் குழந்தை தொழிலாளியின் ரிசல்ட் வந்ததும் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நிறுவனத்தின் உரிமையாளர் மீது எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்து விட்டார்கள். அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். மேற்கொண்டு வழக்கு நடந்தி அந்தக் குழந்தைக்கு ஏற்பட்ட விபத்திற்கு நிச்சயம் இழப்பீடு வாங்கிக் கொடுப்போம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!