வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (07/03/2018)

கடைசி தொடர்பு:10:12 (07/03/2018)

`திரிபுராவைப் போல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும்’ - தமிழிசை நம்பிக்கை!

திரிபுரா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போன்ற நிலைமை தமிழகத்திலும் உருவாகி, பாரதிய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றும் என அக்கட்சியின் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ஆட்சி மாற்றம் பற்றி தமிழிசை

நெல்லை கிழக்கு மாவட்ட மகாசக்தி கேந்திரா பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தயாசங்கர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன், ’’சக்திகேந்திரா பொறுப்பாளர்கள், மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் பிரச்னைகள்குறித்து அறிந்து, அவற்றை தீர்க்கும் வழிமுறைகளைக் காண வேண்டும். அப்படிச் செய்வதன் மூலமாக பொதுமக்களிடம் கட்சிக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். 

கறுப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்கும் வகையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. அத்துடன், நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பான ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னரும் பா.ஜ.க-வுக்கு மக்களிடம் பின்னடைவு ஏற்படவில்லை என்பதைத்தான், சமீபத்திய தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. தற்போது, பாரதிய ஜனதா கட்சி 23 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது. 

பாரதிய ஜனதாமீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. அதுதான் நமது பலம், தமிழக அரசியலில் தற்போது ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை பாரதிய ஜனதாவைத் தவிர வேறு எந்தக் கட்சியாலும் நிரப்ப முடியாது. நம்மால் மட்டுமே தமிழகத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். பாரதிய ஜனதாவை யாராலும் வீழ்த்த முடியாது. அதன் வளர்ச்சியை யாராலும் தடுத்துநிறுத்தவும் முடியாது’’ என்றும் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நெல்லை மாவட்ட மக்களின் பிரச்னைகள், அவர்களின் தேவைகளை முதல்வரிடம் தெரியப்படுத்தி, உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். திரிபுரா மாநிலத்தில் 25 வருடங்களுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டி  ருக்கிறது. அதேபோன்ற நிலைமை தமிழகத்திலும் ஏற்படும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவோம்.

தமிழகத்துக்கு தற்போது ஊழலற்ற நிர்வாகம் தேவைப்படுகிறது. அத்துடன், சட்டம் ஒழுங்கு பிரச்னையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலைமை உள்ளது. தமிழகப் பெண்களால் தனியாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. செயின் பறிப்பு, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மாநிலம் முழுவதும் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டது. நாங்கள் எதிர்மறை அரசியல் செய்ய மாட்டோம். ஆக்கபூர்வமான அரசியலை மட்டுமே நாங்கள் கையில் எடுப்போம். 

பெரியார் சிலைகுறித்து ஹெச்.ராஜா பேசியிருப்பது அவரது சொந்தக் கருத்து. அதனால், அதற்கு நான் பதில் அளிக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவிக்கவில்லை. ஆனால், அப்படி ஒரு கருத்தை பொதுமக்களிடம் கொண்டுசென்றுவிட்டார்கள். இங்கு எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் அரசியல்ரீதியாகவே பார்க்கப்படுகிறது. அது தவறான கண்ணோட்டம். எந்தச் சூழலிலும் நாங்கள் தமிழர்களின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்’’ என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க