வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (07/03/2018)

கடைசி தொடர்பு:08:25 (07/03/2018)

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 34,198 பறவைகள் - ஆய்வில் தகவல்!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடத்தப்பட்ட நீர்வாழ் பறவைகள்குறித்த கணக்கெடுப்பில், 69 வகையான பறவை இனங்களும், மொத்தம் 34,198 பறவைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளங்களில் குப்பைகளைப் போடுவது, மீனுக்காக வெடி வெடிப்பது போன்றவற்றால் பறவை இனங்கள் குறைந்துபோயிருப்பதும் தெரியவந்துள்ளது.

பறவைகள் கணக்கெடுப்பு

அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மையம், மணிமுத்தாறு மற்றும் முத்து நகர் இயற்கைச் சங்கங்கள், தூத்துக்குடி, நெல்லை இயற்கைச் சங்கங்கள், நெல்லை மாவட்ட அறிவியல் மையம் ஆகியவை இணைந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர்வாழ் பறவைகள்குறித்த கணக்கெடுப்பை ஜனவரி 25, 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடத்தினார்கள். மொத்தம் 80 தன்னார்வலர்கள் 6 குழுக்களாகப் பிரிந்து, நெல்லை மாவட்டத்தின் 34 பாசனக் குளங்களிலும் தூத்துக்குடி மாவட்டத்தின் 12 பாசனக் குளங்களிலும் கணக்கெடுத்தனர். 

இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள்குறித்து அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளரான மதிவாணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மொத்தம் 46 பாசனக் குளங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒகி புயலின் காரணமாக அதிக மழைப் பொழிவு இருந்தபோதிலும், மழையால் நிரம்பும் சில குளங்கள் நீரின்றிக் காணப்பட்டன. குறிப்பாக மானூர், கங்கைகொண்டான், வடகரை உள்ளிட்ட குளங்கள் வறண்டு கிடந்தன.

இந்தக் கணக்கெடுப்பில், 69 வகையான நீர்வாழ் பறவைகள் பதிவுசெய்யப்பட்டன. மொத்தம் 34,189 பறவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளத்தில், அதிகப்படியாக 3,154 பறவைகளும் வெள்ளூர் குளத்தில் 2,311 பறவைகளும், கஸ்பா குளத்தில் 2,311 பறவைகளும் காணப்பட்டன. இந்தக் கணக்கெடுப்பில், உண்ணிக்கொக்கு என்ற வகைப் பறவைகள், அதிகபட்சமாக 10,409 பதிவாகியிருக்கின்றன. சில்லிதாரா என்ற பறவை 3,457 எண்ணிக்கையிலும், கறுப்புக் கோட்டான் 2,209 எண்ணிக்கையிலும் பதிவாகி உள்ளன.

வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய வாத்து இனத்தைச் சேர்ந்த ஊசிவால் வாத்து, நீலச்சிறகு வாத்து, கிளுவை, களியன், வரித்தலை வாத்து ஆகியவையும் கணிசமாகப் பதிவாகியிருக்கின்றன. மழைநீர் பாசனக் குளங்களைக் காட்டிலும் தாமிரபரணி பாசனக் குளங்களையே பறவையினங்கள் பெரிதும் விரும்பி வசிக்கின்றன என்பது இந்தக் கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது. அத்துடன், பறவைகளை வேட்டையாடுவதையும் கணக்கெடுப்பாளர்கள் பதிவுசெய்துள்ளார்கள்.

கணக்கெடுப்பு முடிவுகள்

குளங்களை குப்பைத்தொட்டிகளாகவும், திறந்தவெளியை மது குடிக்கும் பாராவும் மாற்றியதால் பறவைகள் குறைந்துள்ளன. குளங்களை மீன் வளர்ப்புக்காக குத்தகைக்கு விடுவதால், அதில் உள்ள மீன்களைக் காக்கும் வகையில் குத்தகைதாரர்கள் பறவைகளை விரட்ட வெடி வெடிப்பதையும் கண்டுபிடித்துள்ளோம். இவற்றை எல்லாம் தடுக்கக் கோரி, மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, வனத்துறை அதிகாரிகளிடம் முறையிடவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார். அவருடன், டாக்டர் பிரான்சிஸ் ராய், தாம்ஸ் மதிபாலன் ஆகியோரும் இருந்தனர்.