நெல்லையில் அறிவியல் கண்காட்சி - அசத்திய மாணவர்கள்!

நெல்லை அறிவியல் மையத்தில், மாணவ மாணவிகள் கண்டுபிடித்த படைப்புகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில், சூரிய சக்தியில் இயங்கும் கார், வாகனங்களின் முகப்பு விளக்குகளால் ஏற்படும் விபத்தைத் தடுக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை வைத்து மாணவர்கள் அசத்தினார்கள். 

அறிவியல் கண்காட்சி

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில், ஆண்டுதோறும் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டுவரும் வகையில் மாநில அளவிலான அறிவியல் புத்தாக்கத் திருவிழா நடத்தப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சி, மாவட்ட அறிவியல் மையத்தில் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கண்காட்சியை நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தொடங்கிவைத்தார். அறிவியல் மைய அலுவலர் நவராம்குமார், நெல்சியா துணைத் தலைவர் சுந்தரேசன் சீனிவாசன், மையத்தின் உதவி பயிற்சி அலுவலர் மாரிலெனின் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

மாநில அளவிலான பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், இந்தக் கண்காட்சியில் பங்கேற்று மொத்தம் 32 அரங்குகளில் அரவியல் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.  அவற்றை ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர். இந்தக் கண்காட்சியில், பனை ஓலைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட பொருள்கள், கொட்டாங்குச்சியால் செய்யப்பட்ட நவீன கலைப்பொருள்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், இரவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் முகப்பு விளக்குகள் அதிக ஒளியுடன் இருப்பதைத் தடுக்கும் வகையிலான கருவியையும் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கருவி பொருத்தப்பட்ட வாகனத்தின் எதிரே வரும் வாகத்திலி  ருந்து அதிக ஒளி வந்தால், இந்த வாகனத்தின் விளக்கிலிருந்து வெளியாகும் ஒளி, அதை குறைத்துக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விபத்துகளைத் தவிர்க்க முடியும்.

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட அறிவியல் உபகரணங்கள், மணல் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நவீன செங்கல் வடிவமைப்பு உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மூன்று நாள்கள் நடைபெற உள்ள இந்தக் காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!