Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

''அவனது வக்ர புத்தி தெரிந்ததால்... திருமணத்தை நிறுத்தினேன்!'' #SpeakUp

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விகடன் முன்னெடுத்திருக்கும் #SpeakUp முயற்சிக்கு, சகோதரிகளும் சில சகோதரர்களும் அனுப்பிவரும் அனுபவக் கடிதங்கள் நிறைய நிறைய. சிறிய அளவில் கலைக்கப்பட்டிருக்கும் பெருமௌனம் ஒன்று, குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சக பெண்களுக்கு, குற்றம் தடுப்பதற்கான தைரியத்தையும் ஆலோசனைகளையும் இந்தப் பெண்களின் வார்த்தைகள் தருகின்றன. உடைத்துப் பேசுவோம் தொடர்ந்து!

''எனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை, வீட்டில் பார்த்த மாப்பிள்ளையால் ஏற்பட்டது. அவன் ஓர் ஆசிரியர். ஆசிரியர் என்றால் பொதுவாக நன்னெறி மற்றும் ஒழுக்கம் மிகுந்த ஒருவராகத்தான் இந்தச் சமூகம் பார்க்கும். மேற்கொண்டு, காளியின் தீவிர பக்தன் என்று வேறு தன்னைச் சொல்லிக்கொண்டார். பூவைத்து, இருவரும் மொபைல் எண்கள் பரிமாறிக்கொண்ட பின், பேச ஆரம்பித்தோம். ஆனால், பேச்சில் காதலைவிட காமமே இருக்கும். அன்பு, மருந்துக்கும் இருக்காது... தன் அநாகரிக எண்ணங்களையே எப்போதும் வெளிப்படுத்துவான். எல்லா பெண்களையும் கொச்சையாக வர்ணிப்பான். கள்ளத்தொடர்பு பற்றிப் பேசுவது அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்.

SpeakUp

பெண் பார்த்துவிட்டுப்போன சில நாள்களிலேயே என்னைத் தொட முயன்றான். கை, தோள் என அவன் கைகள் நீண்டபோது, முதலில் பாசம், காதல் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த சில வாரங்களில், அவன் எல்லை மீற முயன்று நான் தடுத்தபோது, கீழ்த்தரமான தகாத வார்த்தைகளால் திட்டினான். ஏதோ ஒரு படத்தில், 'பொம்பளைன்னா படுக்கையில வேசியா இருக்கணும்' என்று ஒரு டயலாக் வருமே, அதைச் சொல்லிக்காட்டினான். அவன் எல்லை மீறுவது மட்டுமே அவனிடமுள்ள குறையென்று எனக்குப் படவில்லை. அவன் குணத்தில் பிழையென்று நான் உணர்ந்தேன். அவனிடம் வெளிப்பட்ட கட்டுக்கடங்காத ஆக்ரோஷத்தில் நான் விழித்துக்கொண்டேன். அவன் செய்கைகளை தராசில் வைத்துப்பார்க்க ஆரம்பித்தேன்.

நான் சொந்த ஊருக்குச் சென்றாலோ அல்லது வேலை முடிந்து தாமதமாக வீடு திரும்பினாலோ மிகவும் கொச்சையாகப் பேசினான் (தமிழில் உள்ள தரங்கெட்ட வார்த்தைகள் பெரும்பாலும் பெண்களையும் தாய்மையையும் சிறுமைப்படுத்தும் வார்த்தைகளாகவே உள்ளது ஏன்?). அவற்றுக்கெல்லாம் நான் அமைதியாக இருந்து, இன்னும் அவன் என்னவெல்லாம் செய்கிறான் என்று பார்த்தேன். நான் எதிர்பார்த்ததுபோலவே என் அமைதி அவனுக்குத் தைரியத்தைக் கொடுத்திருக்க வேண்டும். நாளுக்கு நாள் என்னை பொம்மைபோல ஆட்டிவைக்க முயன்றான். அவனை நான் தொட அனுமதிக்காதது, அவனுடைய முழு அசுர குணத்தையும் வெளிக்கொண்டுவந்தது. 

குடும்ப வன்முறை, பாலியல் அத்துமீறல் பற்றிய பல செய்திகளைத் தொடர்ந்து படித்துவந்ததால், அவனின் செய்கைகள் தவறு என்பது எனக்குப் புரிந்தது. அதேபோல, தான் ஒரு சைக்கோ என்பதை அவனே தன் செய்கைகளால் என்னை உணரவைத்தான். இப்படி ஒரு வக்ர, ஆக்ரோஷ புத்திக்காரனுடன் வாழ்ந்தால், என் மணவாழ்க்கை நிச்சயம் சிதையும் என்பதை உணர்ந்து, என் பெற்றோரிடம் அனைத்தையும் கூறினேன். அவர்கள், உடனடியாக நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தினார்கள். இத்தனை சம்பவங்கள் நடந்தபோதும் நான் ஒருமுறைகூட அழவில்லை. 

பின்னர், தான் திருந்திவிட்டதாக என் அலுவலகத்தில் வந்து என்னை இரண்டொரு மாதங்கள் தொந்தரவு செய்தான். ஆனாலும், அவனுக்குள் ஏதோ ஒரு வெறி தகித்துக்கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. இறுதிவரை நான் அவனுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாமல்போக, மீண்டும் அதே கொச்சையான வார்த்தைகளை உமிழ்ந்தான். 'போலீஸுக்குப் போவேன்' என்று நான் சொல்ல, குடும்ப மானத்துக்குப் பயந்து ஒதுங்கினான். 

அவன் பெற்றோரிடம் அவன் செய்ததையெல்லாம் சொன்னபோது அதிர்ந்தார்கள். இல்லை, அதிர்ந்ததுபோல் காட்டிக்கொண்டார்கள். அவனது சித்தப்பா மட்டும் எங்கள்மீதுகொண்ட மதிப்பால் அந்த உண்மையை உளறிவிட்டார். 'ஆமா, அவன் கொஞ்சம் அப்படித்தான். கல்யாணமானா சரியாகிடும்னு நினைச்சோம்' என்றார். உடனே என் அம்மா, 'இப்படிப்பட்டவனுக்கு என் பொண்ணைக் கட்டிக்கொடுத்து சாகடிக்கிறதுக்கு, அவ கல்யாண ஆகாம எங்ககூடயே இருந்தாலும் மகிழ்ச்சிதான்' என்றார். 

ஆரம்பத்திலேயே ஏதோ தவறு என்று சுதாரித்து, கண்ணோட்டமிடத் தொடங்கியதால், என் வாழ்க்கை தப்பித்தது. இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இரண்டொரு முறை அவனை தெருவில் எங்கோ பார்க்க நேர்ந்தது. அவனது வக்ரத்துக்கு அன்று நான் அனுமதிக்காததால், என்னால் தலைநிமிர்ந்து அவனைக் கடக்க முடிந்தது. அவன்தான் முகத்தை மறைத்துக்கொண்டு தலைமறைவானான். என் அனுபவத்தில் சொல்கிறேன், வக்ரம் நிறைந்த இன்றைய உலகில், பெண்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். திருமணம் செய்துகொள்ளவிருக்கும் மாப்பிள்ளையாக இருந்தாலும் சரி, காதலனாக இருந்தாலும் சரி, திருமணம் செய்துகொண்ட கணவனாக இருந்தாலும் சரி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்பவனை தைரியமாக எதிர்க்க வேண்டும். தேவைப்பட்டால், காவல் நிலையத்தில் புகார்செய்ய வேண்டும். பெற்றோர்களும் உறவினர்களும், தங்கள் பெண்களின் பாலியல் கொடுமை பிரச்னைகளை மூடிமறைக்கப் பார்க்காமல், அவர்களுக்குத் துணையாக, ஆதரவாக நின்று குற்றவாளியை எதிர்க்க வேண்டும். பெண்கள் மட்டுமல்ல, மொத்தச் சமூகமும் கைவிட வேண்டிய மௌனம் இது. 
#SpeakUp
 

இதுவரை தன் மனதில் அழுத்திக்கொண்டிருந்த கனம் ஒன்றை முதன்முறையாக இங்கு இறக்கிவைத்திருக்கிறார், இந்தச் சகோதரி. இனியும் சகிக்க வேண்டாம் என்ற துணிவுடனும் இனியொருவருக்கு இது நேராக் கூடாது என்ற அக்கறையுடனும், இவர் யாரோ அல்ல, அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என நாம் தினம் காணும் பெண்களின் பிரதி. அவர்மீது அநாகரிக வார்த்தைகள் உமிழ்ந்து, ‘இந்த உலகம் இப்படித்தான்' என்ற பிம்பம் தர வேண்டாம் ப்ளீஸ். இனி, இதுபோல நேராத உலகம் படைப்போம்!

Speak-Up

உங்கள் குரலைப் பதிவு செய்ய http://bit.ly/vikatanspeakup

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement