வெளியிடப்பட்ட நேரம்: 08:19 (07/03/2018)

கடைசி தொடர்பு:08:57 (07/03/2018)

’இந்தப் பிரச்னையை மேலும் இழுத்தடிப்பதா?’ - துணை முதல்வரிடம் ஸ்டாலின் கேள்வி #CauveryIssue

காவிரி விவகாரத்தில் ஆலோசனை மேற்கொள்ள வருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார்.

ஸ்டாலின்


அதை ஏற்று, 03-03-2018 அன்று மு.க.ஸ்டாலினும்  துரைமுருகனும்  தலைமைச் செயலகம் சென்று முதல்வரைச் சந்தித்தனர். அதன்பிறகு நிருபர்களுக்கு ஸ்டாலின் பேட்டி அளித்தார். ''அரசின் சார்பில் கடந்த 3 -ம் தேதியன்று நடைபெற்ற அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்று, 'தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் தமிழக அரசின் சார்பில் டெல்லிக்கு அழைத்துச்சென்று, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி வலியுறுத்த வேண்டும்' என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இரண்டு வாரத்திற்குப் பிறகு, இன்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி எங்களை அழைத்துப் பேசுகையில், 'பிரதமர் சந்திக்க மறுக்கிறார். வேண்டுமெனில், அந்தத் துறையின் அமைச்சரை நீங்கள் சந்தியுங்கள் என்று எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது, என்ன செய்யலாம்?' என்று கேட்டார். 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் சாத்தியக்கூறு இல்லை' என்று சொல்லிவரும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்திக்குமாறு பிரதமர் சொல்வதில் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. இதன்மூலமாக, தமிழக விவசாயிகளையும், ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்றுகின்ற சூழ்ச்சியில் இன்றைக்கு மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.

உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி, பிரதமரை சந்திப்பது, மத்திய அரசுக்கு அழுத்தம்கொடுப்பதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதை ஏற்றுக்கொண்டு, 'திங்கள்கிழமை வரை நாம் பொறுத்துப் பார்க்கலாம். அதற்குள் உரிய பதில் வரவில்லை என்றால், உங்களுடைய கோரிக்கையை ஏற்று, எதிர்வரும் 8-ம் தேதி சட்டமன்றத்தைக் கூட்டுகிறோம்' என முதல்வர் உறுதியளித்துள்ளார்'' என்றார்.

இந்நிலையில், பிப்ரவரி 5 -ம் தேதி துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் மு.க.ஸ்டாலினைத் தொடர்புகொண்டு, காவிரி பிரச்னைகுறித்து பேசினார். அப்போது,  ''வரும் 8-ம் தேதியன்று சட்டமன்றத்தை கூட்டுவதாக நாங்கள் உங்களிடத்தில் சொல்லியிருந்தோம். ஆனால், திடீரென காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பேசுவதற்காக, நான்கு மாநிலத்தின் அதிகாரிகளை டெல்லியிலிருந்து அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள். எனவே, அந்தக் கூட்டம் 9-ம் தேதி முடிந்த பிறகு சட்டமன்றத்தைக் கூட்டலாமா?', என்று கேட்டார்.

அதற்கு மு.க.ஸ்டாலின், ''உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 6 வார காலத்தில் ஏற்கெனவே 3 வாரங்கள் முடிந்துவிட்டன. எனவே, இந்தப் பிரச்னையை மேலும் இழுத்தடிப்பதற்காக, ஏமாற்றுவதற்காக செய்யப்படும் நாடகம் இது' என்று குறிப்பிட்டார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம், ''இல்லை. 9 -ம் தேதி கூட்டம் முடிந்த பிறகு, அதைப் பார்த்துவிட்டு சட்டமன்றத்தைக் கூட்டலாம்'' என்றார். அதை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க