ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

தமிழகம் முழுவதும் பெரியார், அண்ணா சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு!

திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைப்பை அடுத்து, தமிழகம் முழுவதும் பெரியார், அண்ணா சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெரியார்


திரிபுராவில், மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி, பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. வெற்றிக் கொண்டாட்டத்தில்  ஈடுபட்ட பா.ஜ.க மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், பேரணியாகச் சென்று லெனின் சிலையை புல்டோசர் மூலம் அகற்றினர். இதுவரை திரிபுராவில் லெனின் சிலைகள் இரண்டு உடைத்து வீசப்பட்டுள்ளன. இந்நிலையில், பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தனது முகநூல் பக்கத்தில் லெனின் சிலை உடைப்பை வரவேற்று, அந்தப் படத்தை வெளிட்டிருந்தார். மேலும், ''லெனின் யார்? அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? திரிபுராவில் லெனின் சிலலை இன்று உடைக்கப்பட்டது. நாளை, தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே. ராமசாமி சிலை" என்று குறிப்பிட்டிருந்தார். 

இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததோடு, அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். வைகோவும் ஆவேசமடைந்தார். ஈரோட்டில் ம.தி.மு.க நிர்வாகி ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருக்க, அவரை இடைமறித்து மைக் பிடித்த வைகோ, "பெரியார் சிலையை உடைப்பேன்னு ஒருவர் சொல்லியிருக்கிறார். அவருக்கு நான் சவால் விடுக்கிறேன். தமிழ்நாட்டுல எந்தப் பகுதியில வேணும்னாலும் வெச்சிக்கலாம். தைரியம் இருந்தால் சிலை உடைக்க நாள் குறிச்சிட்டு வாங்க. அப்படி வர்றவங்களோட கை, கால் துண்டாக்கப்படும். இந்தக் கை அரிவாள் பிடித்த கை. மோடியின் முப்படையும் வந்தாலும் அதைச் சந்திக்க நான் தயார்" என ஆக்ரோஷமாகப் பேசிவிட்டு அமர்ந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை சிலர் கும்பலாக வந்து உடைத்தனர். இதையடுத்து அந்தப் பகுதியே பரபரப்பானது. பெரியார் ஆதரவாளர்களும் திரண்டனர். பா.ஜ.க நிர்வாகி முத்துராமன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஒருவரைப் பிடித்து பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் சிலை உடைப்பை அடுத்து, தமிழகம் முழுவதும் பெரியார், அண்ணா சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை கோட்டையில் போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்கள் மாநாடு நிறைவு விழா இன்று நடக்கும் நிலையில் தமிழகத்தில் பெரியார் சிலை விவகாரம் சூட்டைக் கிளப்பி இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!