வெளியிடப்பட்ட நேரம்: 09:05 (07/03/2018)

கடைசி தொடர்பு:09:05 (07/03/2018)

பிளாஸ்டிக் பைகளுக்கு பைபை சொல்லும் கோவை மாநகராட்சி! - களமிறங்கும் பசுமை அங்காடிகள்

கோவையில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பசுமை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

பசுமை அங்காடி

கோவையில், 50 மைக்ரானுக்குட்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த ஏற்கெனவே தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து, பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்குப் பதிலாக, மக்காச்சோள கழிவுகள்மூலம் எளிதில் மக்கும் கேரி பேக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனாலும், பிளாஸ்டிக் கேரி பேக்குகளின் பயன்பாட்டை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில்,  பிளாஸ்டிக் பைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில், பசுமை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அங்காடியில், மக்காச் சோளம், மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின்மூலம் தயாரிக்கப்படும் கேரி பேக்குகள் விற்கப்படுகின்றன. அதேபோல, பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக, பாக்குமட்டைத் தட்டுகள் மற்றும் துணிப்பைகளும் இந்த அங்காடியில் விற்கப்படும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “ஒரு கேரி பேக், ரூ.1.20 பைசாவுக்கு விற்கப்படுகிறது. இது தவிர, சில பெரிய நிறுவனங்களை, பை தயாரிக்கும் நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தியுள்ளோம். அவர்களும், பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பைகளை விற்கத் தொடங்கிவிட்டனர். அடுத்தகட்டமாக, மண்டல வாரியாக இந்த பசுமை அங்காடிகள் தொடங்கப்படும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்தாக மாநகராட்சியாக, கோவையை மாற்ற முயற்சி எடுத்துவருகிறோம். இதுதொடர்பாக, மக்களிடம் தொடர்ச்சியாக விழிப்புஉணர்வும் மேற்கொள்வோம். மேலும், அதிரடியாக ரெய்டு நடத்தி, பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் கடைகள்மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என்றனர்.