வெளியிடப்பட்ட நேரம்: 09:06 (07/03/2018)

கடைசி தொடர்பு:10:59 (07/03/2018)

'காவிரிப் பிரச்னையில் நாடகம் இல்லை!' - மு.க.ஸ்டாலினிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்

காவிரி மேலாண்மை வாரியம்  ஸ்டாலின் எடப்பாடி சந்திப்பு


காவிரி விவகாரத்தில் ஆலோசனை மேற்கொள்ள வருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து இருந்தார்.  மு.க.ஸ்டாலினும்  துரைமுருகனும்  தலைமைச் செயலகம் சென்று முதல்வரைச் சந்தித்தனர். அதன் பிறகு நிருபர்களுக்கு ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
''அரசின் சார்பில் கடந்த 3 -ம் தேதியன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்று, 'தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் தமிழக அரசின் சார்பில் டெல்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி வலியுறுத்த வேண்டும்' என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு இரு வாரம் முடிவடைந்த நிலையில், இன்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி எங்களை அழைத்துப் பேசுகையில், 'பிரதமர் சந்திக்க மறுக்கிறார். வேண்டுமெனில் அந்தத் துறையின் அமைச்சரை நீங்கள் சந்தியுங்கள், என்று எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. என்ன செய்யலாம்?' என்று கேட்டார். 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் சாத்தியக்கூறு இல்லை' என்று சொல்லிவரும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்திக்குமாறு பிரதமர் சொல்வதில் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. இதன்மூலமாக, தமிழக விவசாயிகளையும், ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்றுகின்ற சூழ்ச்சியில் இன்றைக்கு மத்திய அரசு ஈடுபட்டு இருக்கிறது.
எனவே, என்ன செய்யலாம் என்று முதல்வர் கேட்டதும், உடனடியாகச் சட்டமன்றத்தை கூட்டி, பிரதமரைச் சந்திப்பது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். அதனை, ஏற்றுக்கொண்டு, 'திங்கள்கிழமை வரையிலும் நாம் பொறுத்துப் பார்க்கலாம், அதற்குள் உரிய பதில் வரவில்லை என்றால், உங்களுடைய கோரிக்கையை ஏற்று, எதிர்வரும் 8-ம் தேதியன்று சட்டமன்றத்தைக் கூட்டுகிறோம்' என முதல்வர் உறுதியளித்துள்ளார்'' என்றார்.
இந்நிலையில், மார்ச் 5-ம் தேதி துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் மு.க.ஸ்டாலினைத் தொடர்புகொண்டு காவிரி பிரச்னை குறித்துப் பேசினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம், ''வரும் 8-ம் தேதியன்று சட்டமன்றத்தைக் கூட்டுவதாக நாங்கள் உங்களிடத்தில் சொல்லியிருந்தோம். ஆனால், திடீரென காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகப் பேசுவதற்காக, நான்கு மாநிலத்தின் அதிகாரிகளை டெல்லியில் இருந்து அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள். எனவே, அந்தக் கூட்டம் 9 -ம் தேதி முடிந்த பிறகு சட்டமன்றத்தைக் கூட்டலாமா?' என்று அப்போது கேட்டார்.
அதற்கு மு.க.ஸ்டாலின், 'உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 6 வார காலத்தில் ஏற்கெனவே 3 வாரங்கள் முடிந்துவிட்டன. எனவே, இந்தப் பிரச்னையை மேலும் இழுத்தடிப்பதற்காக, ஏமாற்றுவதற்காகச் செய்யப்படும் நாடகம் இது'  என்று குறிப்பிட்டார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம், 'இல்லை. 9 -ம் தேதி கூட்டம் முடிந்த பிறகு, அதைப் பார்த்துவிட்டு சட்டமன்றத்தைக் கூட்டலாம்' என்றார். அதனை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இத்தனை ஆண்டுகாலமாக சட்டப்பேரவை என்றாலே அமளிதுமளிகளுக்குப் பெயர் போன இரண்டு கட்சித் தரப்பும் காவிரி நதிநீர்ப் பிரச்னையில் இணக்கமாகி உள்ளன. இது தமிழக மக்களின் மற்ற பிரச்னைகளிலும் தொடரட்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்