வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (07/03/2018)

கடைசி தொடர்பு:12:04 (07/03/2018)

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய கப்பல்! - 76 ஆண்டுகளுக்குப் பின் கண்டெடுக்கப்பட்டுள்ள அதிசயம்

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா பயன்படுத்திய ’லேடி லெக்ஸ்’ எனும் போர்க் கப்பல், ஆஸ்திரேலியா கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 

லேடி லெக்ஸ்

யு.எஸ்.எஸ்., லெக்சிங்டன் என்ற போர்க் கப்பல், இரண்டாம் உலகப் போரில் முக்கியப் பங்கு வகித்தது. இந்தக் கப்பலை 76 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியா கடல் பகுதியில் கண்டுபிடித்தனர், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பால் ஆலென் தலைமையிலான குழுவினர். இந்த ’லேடி லெக்ஸ்’ போர்க்கப்பலைத் தேடும் பணியில், கடந்த ஆறு மாதங்களாக ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் (மார்ச்.,5) ஆஸ்திரேலியாவிலிருந்து 800 கி.மீ தொலைவில் உள்ள கோரல் கடல் பகுதியில், 3,000 கி.மீ ஆழத்தில் இப்போர்க் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தகவலை அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் போர்க்கப்பலுடன் இருந்த 35 போர் விமானங்கள் மற்றும் 11 விமானங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

‘Lady Lex’

1939-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இதில், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை எதிர்த்துப் போர் புரிந்தனர். 1942-ம் ஆண்டில் மே 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ’யு.எஸ்.எஸ்.லெக்சிகன்’ என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜப்பானை எதிர்த்துப் போரிட்டது. இக்கப்பலை ஜப்பான் படையினர் தாக்கி மூழ்கடித்தனர். இந்தக் கப்பலில் இருந்த, 2735 அமெரிக்க வீரர்களில் 216 வீரர்கள் பலியாகினர். 

போர் கப்பல்

கோரல் கடல் பகுதி, இரண்டாம் உலகப்போரில் மிகமுக்கியப் பங்கு வகித்தது. இந்தப் பகுதியில், ஜப்பானை எதிர்த்து அமெரிக்கா நடத்திய கடும் சண்டையினால், பசிபிக் பகுதியில் ஜப்பான் படை முன்னேறி வருவது தடுக்கப்பட்டது. அதனால், 1945-ம் ஆண்டு மே மாதத்தில் ஜெர்மனி தனது தோல்வியை ஒப்புக்கொண்டது. அதன்பின், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியதில் ஜப்பான் சரணடைந்து. இரண்டாம் உலகப்போரும் முடிவுக்குவந்தது.