பெட்ரோல் குண்டுவீச்சு... பூணூல் அறுப்பு. தொடரும் பதற்றம்

பெரியார் சிலை தொடர்பாக, ஹெச். ராஜாவின் ஃபேஸ்புக் பதிவு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.  

கோவை, பா.ஜ.க  அலுவலகம்

திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பா.ஜ.க, அங்கு விரைவில் ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில், அங்கு லெனின் சிலை அகற்றப்பட்டது.  இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லெனின் சிலை போல், தமிழகத்தில் பெரியார் சிலையும் உடைக்கப்படும் என்ற ஹெச்.ராஜாவின் ஃபேஸ்புக் பதிவு  சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஹெச்.ராஜாவுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதனிடையே, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை, பா.ஜ.க பிரமுகர் ஒருவரால் நேற்று இரவு உடைக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், கோவை காந்திபுரம் அருகே உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் இன்று அதிகாலை, மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல்குண்டு வீசியுள்ளனர்.

பெட்ரோல்குண்டு வீசிய சம்பவம், அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, பெட்ரோல்குண்டு வீசிய நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவம் நடைபெற்ற, கோவை பா.ஜ.க அலுவலகம் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.  பெட்ரோல் குண்டு வீசிய இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பாலு மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 

 

இதனிடையே, இன்று காலை சென்னை மயிலாப்பூரில் ராவ் என்பவரை அடையாளம் தெரியாத நான்கு பேர் வழிமறித்து  அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்துக்கொண்டு பைக்கில் அதிவேகமாக சென்றுவிட்டதாக ஐஸ்அவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.  ஐஸ்அவுஸ் போலீஸார் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது, திராவிடர் விடுதலைக்கழகம் என்ற அமைப்பை சேர்ந்த ராவணன், உமாபதி , ராஜேஷ், பிரபாகரன் ஆகிய  4 பேர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில், தாங்கள்தான் பூணூலை அறுத்தோம் எனக் கூறி சரணடைந்தனர்.

பெரியார் சிலை தொடர்பாக, ஹெச். ராஜாவின் கருத்தின் தொடர்ச்சியாக பெரியார் சிலை சேதம், பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் பூனூல் அறுப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!