ஹெச்.ராஜா புகைப்படம் எரிப்பு! - கோவையில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு!

முகநூலில், பெரியார் சிலை  அகற்றப்படும் எனக்கூறிய, ஹெச். ராஜா உருவப்படத்தை எரித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, 'இன்று திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ராமசாமி சிலை உடைக்கப்படும்' எனப் பதிவிட்டார். ஹெச்.ராஜாவின் இந்தக் கருத்துக்கு, கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஹெச்.ராஜாவைக் கண்டித்து, கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு, இந்திய மாணவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மதவெறியை தூண்டும் ஹெச்.ராஜாவைக் கண்டித்தும்,  எடப்பாடி அரசு  ராஜாவை கைதுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், ஹெச் .ராஜாவின் புகைப்படங்களையும் அவர்கள் எரித்தனர்.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் மாரியப்பன், “தமிழகத்தில் மதவெறியையும் வன்முறையையும் தூண்டும் விதமாகப் பேசிவரும் ஹெச்.ராஜாவை வன்மையாகக் கண்டிக்கிறோம். பணபலத்தாலும், தீவிரவாதத்தாலும் திரிபுராவில் ஆட்சியைப் பிடிக்கும் முன்பே, லெனின் சிலையை பா.ஜ.க உடைத்திருக்கிறது. தமிழக அரசு, ஹெச்.ராஜாவை கைதுசெய்ய வேண்டும். பா.ஜ.க அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். மதியிழந்த ராஜாவை, தமிழக அரசு கைது செய்யவில்லை என்றால், நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும்” என்றார்.

இதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 13 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்நிலையில், கோவை மாநகரில் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!