`சார் விளையாடாதீங்க’- அடுத்த நொடியில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சென்னை எஸ்ஐ

சென்னை அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மேலையூரைச் சேர்ந்தவர், சதீஷ்குமார்-33. இவர், கடந்த 2011- ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தார். இவர், தற்போது சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த சதீஷ்குமார், இன்று அதிகாலை சுமார் 1.45 மணியளவில், தனது கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 

சதீஷ்குமார்

ஒரு வெள்ளைத் தாளில், ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என  எழுதி, அதை அருகில் இருந்த மேஜைமீது வைத்துவிட்டு, பிஸ்ட்டலோடு காவல் நிலையத்தின் வெளியே சென்ற சதீஷ்குமார், மீண்டும் உள்ளே வந்து பிஸ்ட்டலைத் தனது நெற்றிப் பொட்டின்மீது வைக்க, பதறிப்போன சிறப்பு உதவி ஆய்வாளர் சிரஞ்சிவி, ‘சார் விளையாடாதீங்க’ என்று சொன்னதும், பிஸ்ட்டலை சிரஞ்சீவியை நோக்கிக் காண்பித்துவிட்டு, பின்னர் காவல் நிலைய நுழைவு வாயில் அருகில் சென்று, வலது புறம் காதுக்கு மேல் தனக்குக்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்

இந்தச் சம்பவம் தொடர்பாக, கண்காணிப்பு கேமரா காட்சியைக்கொண்டு காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணைசெய்துவருகிறார்கள். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திவருகிறார். 

கடந்த 4-ம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், ஆயுதப்படை காவலர் அருண் ராஜ்  துப்பாக்கியால் சுட்டு தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி குறைவதற்குள், மற்றொரு தற்கொலைச் சம்பவம் நடந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!