வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (07/03/2018)

கடைசி தொடர்பு:12:30 (07/03/2018)

`தெருவுக்குத் தெரு நின்றுகொண்டு லஞ்சம்' - போலீஸுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கொந்தளிப்பு

போலீஸார், வாகனச் சோதனை என்கிற பெயரில், ஆவணங்கள் இருந்தும் வசூல் வேட்டை நடத்துவதாக திருச்சியில் அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கான ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, உய்யக்கொண்டான் திருமலை அருகிலுள்ள செங்கதிர்ச்சோலை கிராமத்தைச் சேர்ந்த எம்.டெக். பட்டதாரியான சந்தோஷ்குமார் என்பவர், தனது நண்பர் பொறியியல் பட்டதாரி பாலசந்திரனுடன் திருச்சி - வயலூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருக்கும்போது, ஆவணங்கள் இருந்தும் அவர்கள்மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதைத் தட்டிக்கேட்ட அப்பகுதி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்கள்மீது வழக்குப் பதிவும்செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், அத்துமீறி நடந்துகொண்ட  காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 10 நாள்களுக்கு முன்னாள் ஆர்பாட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்ஆணையரிடத்தில் மனுஅளிக்கப்பட்டது.  ஆனாலும்,  இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால், இன்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள்  ஏராளமானோர்  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திரண்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீஸார், வாகனச் சோதனை என்கிற பெயரில், தெருவுக்குத் தெரு நின்றுக்கொண்டு அப்பாவி பொதுமக்களிடம் லஞ்சம், வழிப்பறி செய்வதாக, அத்துமீறும் காவல்துறையைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த விவகாரத்தை நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், அந்தச் சமயங்களில் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியதுடன், தமிழ்நாடு முழுவதும் ரவுடியைப்போல ராஜ்ஜியத்தை அரங்கேற்றிவருவதாகவும், மக்களின் ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டிய மக்கள் அதிகாரம் அமைப்பினர், இது தொடர்பாக போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என எச்சரிக்கைவிடுத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க